முல்லைப் பெரியாறு - ஒரு கேரளீய பார்வை
சமீப நாட்களாக ஒரு நாளைக்கு பல முறை "முல்லைப் பெரியாறு" என்ற பெயர் காதில் பட, அது என்னதான் பிரச்சனை? கேரளம் ஏன் எதிர்க்கிறது? என்பதை அறிய முற்பட்டு "மாத்யமம்" என்ற மலையாள நாளிதழில் நவம்பவர் 27ஆம் இடம்பெற்ற ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...
144 ஆண்டுகளுக்கு முன்பு (1862ல்) இங்கு ஒரு அணை கட்ட வேண்டும் என்று பிரிட்டீசாரின் பிரதிநிதியாகிய மதராஸ் ஆளுநர் திருவிதாங்கூர் அரசரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில் இருந்த அரசர் சுமார் 25 ஆண்டுகள் சம்மதம் தெரிவிக்காமலேயே தள்ளிப்போட்டார். அதற்கு மேலும் அவரால் சமாளிக்க முடியாமல் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசர் இவ்வாறு கூறினார். 'என்னுடைய இதயத்தில் ஓடுகின்ற இரத்தத்தில் நுழைத்துதான் இதனை நான் செய்கிறேன்'.
ஆனால், மக்களாட்சியில் சிறந்த ஆட்சியாளர்கள் என்று நாம் கருதுபவர்கள் ஆட்சி செய்த போது, 1970 மே 29ஆம் நாள் நம்முடைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் முன் யோசனை இல்லாத நம் செயல்பாட்டை உணர்த்துகிறது. உலகம் முழுவதும் அணைகளைக் குறித்த அறிவும் அனுபவங்களும் நம் முன்பாக இருந்தும் நாம் இதனை செய்தோம். 1956ஆம் ஆண்டு மாநில புணர்நிர்மான சபை ஏற்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கிடையே ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்தங்கள் புதுப்பிப்பதற்கும் நீக்குவதற்கும் வாய்ப்பு இருந்தபோது நாம் அதனை செய்யவில்லை. ஒரு அணை 999 வருடங்கள் நீடித்திருக்காது என்பதைக்கூட அறியாதவர்களாக நம்முடைய ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்?
பாதுகாப்புதான் இன்றைய முக்கிய பிரச்சனை. 136 அடிக்குமேல் நீர் தேக்கினால் பிரச்சனை என்ற ரீதியில் நடக்கின்ற பிரச்சாரம் தவறானதாகும். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அணையில் நீர் தேக்குவது உலகில் நான்கு அணைகளில் மட்டுமே. இதில் மற்ற மூன்று அணைகளிலும் டீகமிஷன் செய்யப்பட்டுவிட்டது. இவற்றில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இதில் நான்காவதாக உள்ளதுதான் முல்லைப் பெரியாறு.
ரிக்டர் அளவுகோலில் 4-5 அளவு பூகம்பம் ஏற்பட சாத்தியமுள்ள இடுக்கியில்தான் இது உள்ளது. பூகம்பம் ஏற்பட்டால் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் அணை உடையும். இடுக்கியில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முல்லைப் பெரியாறின் நீர் முழுவதும் 3 - 3.30 மணி நேரத்தில் வெளியாகி, இதன் மூலம் இடுக்கியின் மற்ற மூன்று அணைகளில் ஒன்றை அது தகர்க்கும். இது லோவர் பெரியாறு, பூதத்தான் அணை போன்றவற்றையும் தகர்த்து நான்கு மாவட்டங்களில் பிரளயத்தை உண்டாக்கும். முல்லைப் பெரியாறில் 130 அடி நீர் இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு என்பதுதான் உண்மை.
இப்பிரச்சனையில் அனைவரும் ஏற்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பரிசோதனை செய்வதுடன், இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் பிளானும் தீட்ட வேண்டும். இதற்காக உலக அணை கமிஷன், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் உதவியை நாடலாம். எந்த வெளிநாட்டு நிறுவனம் பரிசோதனை செய்தாலும் முல்லைப் பெரியாறில் 75 முதல் 80 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என்றே கூறுவர்.
இதற்கு அவசியமில்லை; உச்ச நீதிமன்றம் எல்லாவித சோதனைகளையும் செய்தபின்னர்தான் தீர்பபு கூறியுள்ளது என்று தமிழ்நாடு வாதிக்குமானால், கேரள அரசு அதனை அங்கீகரிக்க வேண்டியதில்லை. மக்களின் உயிர் மற்றும் உடைமை குறித்த அச்சத்தை தீர்க்கும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. எனவே கேரள அரசு வேறு ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த அணை உடைந்தால் ஏற்படுகின்ற அனைத்து சேதங்களுக்கும் தமிழ்நாடு பொறுப்பேற்பேற்று அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு எழுதிக் கொடுக்க வேண்டும்.
மனித உயிரின் விலையை நிர்ணயிக்க இயலாது என்றாலும் ஒரு காப்பீட்டு நிறுவனம் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையையாவது தமிழ்நாடு அளிக்க வேண்டும். மரணம் அடையும் ஒவ்வொரு உயிருக்கும் 5 கோடியும், சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு அவற்றின் மதிப்பிற்கேற்பவும் நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
---
இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின் கேரளாவின் அச்சமும், எதிர்ப்பும் சரி என்றே படுகிறது. பிரச்சனை வந்தபின் செயல்படுவதைவிட வருமுன் செயல்படுவதே நல்லது.