Tuesday, June 24, 2008

தசாவதாரம் - ஒரு முஸ்லிமின் பார்வையில்

கமலின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு தசாவதாரம் பல்வகை விமர்சனங்களுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே இந்தப்படத்தின் முதல் வெற்றி. இந்தப்படத்தில் இடம்பெறும் பாடலான " கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது - கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்பதுபோல் "வசூலை மட்டும் கண்டால் விமர்சனம் தெரியாது" என்று தயாரிப்பாளர் பாடிக் கொண்டிருக்கக் கூடும். தமிழ் சினிமா வரலாற்றில் ரெக்கார்டு கலெக்ஷன் என்று கூறிக் கொள்கிறார்கள். இதனால் கமலுக்கு இலாபம் ஒன்றும் இல்லை. அடுத்தபடம் வேறு ஒரு நிறுவனத் தயாரிப்பில் நடித்தால், இந்தப் படத்தின் வசூலைச் சுட்டி கூடுதலாகக் கேட்க வாய்ப்புண்டு. அடுத்த படம் சொந்தப் படம்தான். சோதனை முயற்சிதான் என்று கூறப்படுகிறது. வாழ்த்துவோம்.

தசாவதாரத்தின் பலம், பலவீனம், அதன் நுண்ணரசியல், அதன் விளைவுகள் (அதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏதேனும் இருக்குமா? - என்ன கொடுமைசார் இது?) என்று பலவும் அலசப்பட்டுவிட்ட வேளையில், அதன் வரலாற்றுத் தகவல் பிழையைச் சுட்ட வேண்டி இப்பதிவு.

"இயேசுவும் அல்லாஹ்வும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில்..." என்ற கமலின் கணீர் குரலில் படம் தொடங்குகிறது. பிரச்சனை இதுதான்.

வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனைகளுக்கு கிறித்தவமோ, இஸ்லாமோ காரணமில்லை. முஸ்லிம் மன்னர்கள் இப்பிரச்சினையைத் தூண்டிவிட்டு, பிரித்தாளும் சூழ்ச்சிகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதைக் கூறுவதற்காகத்தான் கமல் இந்த வசனத்தை இடம்பெறச் செய்திருக்கக் கூடும் என்று நம்புகிறேன். காரணம் வரலாறு தெரியாதவரல்ல அவர். எனினும் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டுமென்பதற்காக....

வைணவ சைவப் பிரச்சனை நடக்கும்போது இந்தியா என்ற ஒற்றை நாடு உலகில் அமைந்திருக்கவில்லை. பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு கண்டமாகத்தான் அது அமைந்திருந்தது. தற்போதைய இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய பகுதிகளே இந்தியா என்று அறியப் பட்டது. இந்தியா என்று அறியப்படுவதற்கு காரணர்கள் அரேபியரே. "ஆதி மனிதர் ஆதம் வானிலிருந்து வெளியேற்றப் பட்டபோது அவர்கள் வந்திறங்கியது இந்தியப் பகுதியில்" என்று நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிப்பதாக தாரீகுத்தப்ரீ எனும் நூலில் பதியப்பட்டுள்ளது. நிற்க.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கிறித்தவம் ஏற்கப்படுவதற்கு முன்னரே புனித தோமையர் இந்தியா வந்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

கி.பி. 52ஆம் ஆண்டிலேயே இன்றைய கேரளாவில் உள்ள கொடுங்கல்லூருக்கு வந்து கிறித்துவத்தைப் பரப்பினார் என்றும் கி.பி. 72ல் சென்னை பரங்கிமலையில் கொல்லப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. (பரங்கிமலைப் பகுதி அவர் பெயரலாலேயே St. Thomas Mount என்று அழைக்கப் படுவதை நாம் அறிவோம்.)

கிறித்துவுக்கு சுமார் 9 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரேலிய மன்னர் சாலமன் (பைபிள் குறிப்பிடும் அதே சாலமன்தான்) ஆட்சிக் காலத்தின் போதே யூதர்கள் இன்றைய கேரளாவின் கொச்சியில் வந்திறங்கினர் என்று யூதர்களின் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.


யூதம் மற்றும் கிறித்தவத்தைப் போலவே இஸ்லாமும் இன்றைய கேரளாவின் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தது. உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவுக்கு இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்கு ஆட்களை அனுப்பியதாக தாரீகுத் தப்ரீ எனும் நூலில் பதியப்பட்டுள்ளது. (இந்நூலை எழுதிய அபூ ஜஃபர் முஹம்மத் இப்னு ஜரீர் அத்தப்ரீ கி.பி. 838க்கும் 923க்கும் இடையில் வாழ்ந்தவர்.)

தமிழ் மன்னர்களில் ஒருவராயிருந்த மன்னர் சேரமான் பெருமாள் காலத்திலேயே, நபிகளார் உயிருடன் இருந்த போதே இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது என்பதே உண்மை.

சுதீர் பிரோத்கர் எனும் இந்துத்துவ வரலாற்றாசிரியர் கூறுகிறார்:
Many of us do not know that Islam first came into India in the province of Kerala during the lifetime of Prophet Mohammed itself.
This King from Kerala was Cheraman from the Chera dynasty of Kerala. He gave a patient hearing to the discourses of the Messengers of Islam. On hearing them, he was favourably impressed by their message of universal brotherhood which is enshrined in Islamic theology and is recommended to be practiced within the Muslim community. (Ironically this concept is limited to the Muslim community alone, while towards the unbelievers what is advocated is relentless hatred. And in practice even within the Muslim community, in real life, the general attitude is of fanaticism and violence when the energy of the Muslims is not directed towards battling the non-Muslims).

But King Cheraman was favourably impressed with what he was told and he is said to expressed interest in Islam. Local legend says that King Cheraman visited Mecca and converted to Islam in the 7th century. This happened before Islam had become a military force and started off rampaging on its global Jehad. King Cheraman also built a Mosque in Kerala and many local people converted to Islam along with him.

(ஆக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டுவந்தவர்களைத் தவிர மற்ற) அனைவருமே இந்தியாவின் பூர்வகுடிகளான தமிழர்கள் குடியிருந்த பகுதிகளுக்கே வந்துள்ளனர். ஆனால் இந்தியாவின் வரலாற்றை எழுதிய / எழுதிக் கொண்டிருக்கும் பார்ப்பண வரலாற்றாசிரியர்கள் வடக்கில் நிகழ்ந்தவைகளையே முன்னிலைப் படுத்துகின்றனர். (ஆனந்த விகடனில் பார்ப்பனரான மதன், தமிழர்களுக்கென்று வரலாறு கிடையாதுன்னு சமீபத்தில் சொன்னது, இந்தியாவின் பூர்வகுடிகளான தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டே திரிக்கும் கும்பலின் சதியின் ஒரு அங்கமே.)

கஜினி முஹம்மது, கோரி முஹம்மது என்ற ஆப்கன் மன்னர்களின் படையெடுப்புக்குப் பின்னரே இஸ்லாம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று வரலாற்றுத் திரிப்பில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தமிழ், தமிழர், தமிழ் மண் இவை இந்தியாவுடன் சேராது என்று இவர்கள் எண்ணுகிறார்களோ?
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
80களின் இறுதியில் கமலிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்... (தினத்தந்தியில் வாசித்ததாக நினைவு)

நூல்கள் வாசிப்பதில் ஆர்வமுடையவர் நீங்கள். தற்போது எந்தவகையான நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மதம் மாறிய ஒருவர் இஸ்லாம் குறித்தும் குர்ஆன் குறித்தும் எழுதியுள்ள நூலைப் படித்துக் கொண்டுள்ளேன்.
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
வாசிப்பு ஆர்வமுடைய கமல் அவர்களே, இந்தியாவை அறிய அதன் பூர்வகுடிகளான தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். வடவர்கள் வரலாறு என்று எழுதி வைத்துள்ளவற்றை கண்ணை மூடி ஆதாரமாக ஏற்றுக் கொள்வதை விட்டொழியுங்கள்.