Friday, March 24, 2006

டோண்டு - இஸ்ரேல் - சமுத்திரா

கால்காரி சிவா என்பவர் என் அரேபிய அனுபவங்கள் என்ற தலைப்பில் தனக்கு அரேபிய நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதி வருகிறார். அதற்கு பின்னூட்டமளித்த டோண்டு அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு இளப்பமே. இந்துக்களைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் சொல்லிக் கொள்ளும்படியில்லை.
அவன்களிடம் போய் வேலை செய்யவேண்டும் என்பது துரதிர்ஷ்டவசமானதே.

நான் ஐ.டி.பி.எல்லில் வேலைக்கு சேர்ந்தபோது எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சிதான், ஒரு விஷயத்தைத் தவிர. அல்ஜீரியாவில் வேலை என்றார்கள். ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம். நல்ல வேளையாக அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆயிற்று. பிழைத்தேன்.

அன்புடன்,டோண்டு ராகவன்
---

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவங்கள் கிடைக்கக்கூடும். அந்த வகையில் கால்காரி சிவாவுக்கு அவர் கூறுவது போன்றே நடந்திருந்தால் வருத்தப்படக்கூடியதே.

நான் துபையில் பணியாற்றியபோது எனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது. இராம.கி. ஐயா அவர்களும் தனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது என்று கூறுகிறார்.

அரேபிய நாடுகள் எதிலும் பணிபுரிந்திடாத டோண்டு அவர்கள், அரேபியர்களை எதிர்ப்பதற்குச் சொன்ன காரணம் எனக்கு வியப்பை அளித்தது. எனவே நான் இப்படி கேட்டேன்...

Dondu Said...
//ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம்.//

இஸ்ரேல் டோண்டு அய்யாவுக்கு தாய்நாடா? அல்லது இரத்த சம்பந்தம் ஏதேனும் உள்ளதா? இஸ்ரேலுக்கு விரோதி என்றால் இந்தியரான இவருக்கு என்ன வந்தது?

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

வழக்கம் போலவே இந்த கேள்விக்கு சமுத்திரா தன்னுடைய தேசபக்தி பதிலை இப்படி கூறுகிறார்...

எல்லாம் ஒரு நன்றி உனர்வு தான் அய்யா.

வேறு எந்த நாடு நமக்கு அவர்களின் வார்ரிசர்வுகளில் இருந்து அவசர-அவசரமாக அம்யூனிஷன் சப்பளை செய்தது கார்கில் போரின் போது?

டோண்டு அவர்கள் ஐ.டி.பி.எல்லில் வேலைக்குச் சேர்ந்தது 1981ஆம் ஆண்டு.

அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றது 1993 ஆண்டு.

கார்கில் போர் நடைபெற்றது தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற 1999ஆம் ஆண்டு.

தகவல்களை கூகிளிலிருந்து மட்டுமே எடுத்துப்போட்டால் இப்படித்தான் இருக்கும். பாவம், இவர் என்ன செய்வார்? 21 வயது பாலகன் அல்லவா? ஆனாலும் டோண்டு அய்யாவுக்கான என் கேள்வி தொடர்கிறது.

Thursday, March 23, 2006

தேர்தல் திருவிழா: தி.மு.க. கூட்டணி தொகுதிகள்

தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கியுள்ள தொகுதிகள் விபரம் முழுமையாக இங்கு கிடைக்கிறது.

பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது முதலே கலைஞர் கூட்டணிச் சிக்கலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி தனது சாதுர்யத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்றே கூறவேண்டும்.

மாறாக எதிர்முகாமில் 10முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை.

Wednesday, March 15, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்

1997ஆம் ஆண்டு கோவையில் சமூக விரோதிகள் சிலர் செய்த மாபாதக செயலான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 158 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இந்த செயலைச் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கொலைக்கு கொலை என்ற இஸ்லாமிய அடிப்படையிலேயே மரண தண்டனை நிறைவேற்றினாலும் பொருத்தமானதே.

கைது செய்யப்பட்ட 158 பேரில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்தார். சிறைவாசிகளின் குடும்பத்தினர் 59 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது சம்பந்தமாக இதுவரை 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் சர்தார் என்ற 24 வயது இளைஞனுக்கு (கைது செய்யப்பட்ட போது இவருக்கு வயது 17) ஒரு சாட்சியும் அளிக்காத நிலையில் இந்த இளைஞனுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அந்த இளைஞனின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தாலும் தண்டனைக் காலமாக 3 அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் அதையும் தாண்டி சிறையில் இருக்கிறார்கள். கொலைக் குற்றம் மற்றும் பொடா வழக்குகளில் தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயந்திர் மற்றும் வை.கோ. போன்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை தமிழக அரசு தெரிவித்தும் ஜாமீன் வழங்கப் பட்டது. இவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றவர்கள்; வழக்கின் போக்கையே மாற்றும் செல்வாக்கு அவர்களுக்கு உள்ளது என்றெல்லாம் வாதிடப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். கோவை சிறைவாசிகளைப் பொறுத்தவரை இப்படி எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. பின் ஏன் பிணையில் விடுவிக்கப்படவில்லை.

இது குறித்து நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில் என்.கே. பிரமசந்திரன் மே4, 2005 அன்று இப்படி கேட்கிறார்: நமது நீதி பரிபாலன முறை குறித்து முழு நாட்டிடமும் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். சாட்சியங்கள், விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் இத்யாதி முடிவடைந்து, அப்துந் நாஸர் மதானி அப்பாவி என்று தெரியவந்தால், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்ததற்கு யார் பொறுப்பேற்பார்? இது மிக முக்கியமான கேள்வியாகும். இதற்கு சரியான பதிலை நாம் காண வேண்டும்.

இவ்வழக்கின் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் திரு பி. பால்பாண்டியன், வழக்கின் முக்கிய புலணாய்வு அதிகாரியான ராஜசேகரிடம் கேட்ட கேள்வியும், அவரின் பதிலும்....

கேள்வி: இவ்வழக்கில் எதிரிகள் 74 அப்துல் சலாம், 75 அப்துல் சுக்கூர், 76 காதர், 77 ஜமேஷா, 79 ஹசன், 82 பஷீர், 83 அப்துல் சத்தார், 86 அபுதாகிர், 87 ஜப்பார், 90 கலந்தர் பாட்சா, 93 மொகமது அலி, 95 பிலால், 97 சிராஜுதீன், 98 லியாகத் அலி, 100 நஷீர் மற்றும் 159 குலாம் ஆகிய நபர்களுக்கு எதிராக ஏதாவது சாட்சிகள், இந்த எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ வாக்குமூலமோ அல்லது விபரமோ எதுவும் அளித்ததாக உங்கள் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதா?

பதில்: மேற்சொன்ன எதிரிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சாட்சிகளின் வாக்கு மூலங்களில் மேற்சொன்ன எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ அல்லது விவரம் வாக்குமூலங்களிலிருந்து எதுவும் வெளிப்படவில்லை.

பின் ஏன் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை? இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் மட்டுமா?

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.tmmkonline.org/tml/archieves/others/98_712.htm
http://www.tmmkonline.org/tml/others/109971.htm

இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆர்ப்பாட்டம் குறித்து அறிய: http://www.tmmkonline.org/tml/photos/28-2-06/28-2-06.htm

Saturday, March 11, 2006

தேர்தல் திருவிழா - ம.தி.மு.க.

சென்ற வாரத்தில் தமிழக அரசியலில் நிகழ்ந்த எதிர்பாரா திருப்பத்தைத் தொடர்ந்து, வை.கோ.வும் ம.தி.மு.க.வும் விவாதப் பொருளானார்கள். வலைப்பதிவிலும் இது குறித்து அதிகம் பேசப்பட்டது. வை.கோ.வின் இந்த செயலை நியாயப்படுத்திய பதிவர்களில் பெரும்பாலோர் சொன்ன கருத்து இதுதான்:

தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே
இல்லை. ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென
உறுப்பினர் கிடையாது. கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில்
போட்டியிட்டு வெல்ல வேண்டும்.


தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே இல்லை.

பொதுவாகவே எந்த ஒரு கட்சியானாலும் தங்கள் கட்சி வளரவேண்டும் என்பதையே விரும்புவார்கள். காங்கிரஸ் கட்சி முதல் கடைசியாகத் தோற்றுவிக்கப்பட்ட பு.தா. இளங்கோவனின் பாட்டாளி முன்னேற்றக் கழகம் வரை அனைவருக்குமே இந்த விருப்பம் உண்டு. தங்கள் கட்சி வளர வேண்டும் என்ற நோக்கத்தை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மற்ற கட்சிகள் வளரக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நோக்கம் எல்லா கட்சிகளுக்குமே உண்டு. உதாரணமாக 4ஆம் நிலையில் இருப்பதாக கருதப்படும் ம.தி.மு.க. ஐந்தாம் நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்றால் விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்பது ம.தி.மு.க.வின் நோக்கம். வை.கோ. எப்படி விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்று விரும்புவாரோ அப்படியே பா.ம.க.வும் விரும்பும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்து கட்சிகளின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும். இதில் கருணாநிதி மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தி.மு.க.வை ம.தி.முக.வின் வளர்ச்சிக்கு தடையாக சொல்லப் படுவதிலிருந்து தி.மு.க.வின் அழிவுதான் ம.தி.மு.க.வின் வளர்ச்சி என்று சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் எனக்குப் புரிகிறது.

ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென உறுப்பினர் கிடையாது.

ம.தி.மு.க.வின் தலைமைதான் இதற்கு பொறுப்பாக வேண்டும். கட்சி தொடங்கப்பட்ட பின் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தல் எதிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. 1996ல் நிகழ்ந்த மாபெரும் எதிர்ப்பு அரசியலில் பதவியிலிருந்த கட்சியே பரிதாப நிலையை எட்டியதால், ம.தி.மு.க.வும் பிரதிநிதித்துவம் பெறமுடியவில்லை. 2001ல் ஜெயா அமைத்த மகா கூட்டணியினாலும் இந்த நிலை ஏற்பட்டது. இதற்கு எந்த வகையில் கருணாநிதி பொறுப்பாவார்?

கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.

அதிக தொகுதியில் போட்டியிடுவதால் கட்சிக்கு பரவலான அறிமுகம் கிடைக்க வாய்ப்புண்டு என்பதை மறுக்கவில்லை. 1996ஆம் ஆண்டு வை.கோ. இதைதான் செய்தார். தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் ம.தி.மு.க.வின் கொடி மட்டுமே இருந்த நிலையையும் 1997ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நானே பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகமான தொகுதியில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த வாதம் உண்மையானால் 1996ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க. 2001ல் தேய்ந்து போனதின் காரணம் என்ன? ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் ஓரளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் வளரவில்லை. 2001ல் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. எந்த அளவு வளர்ந்திருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் காணவேண்டும். இவற்றுக்கு பதில் கண்டால் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது தற்போது கூட்டணி கணக்கின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதை விளங்கலாம்.

ம.தி.முக. - பா.ம.க. ஒப்பீடு

ம.தி.மு.க.வின் வளர்ச்சியை பா.ம.க.வுடன் ஒப்பிட முடியாது. பா.ம.க.வின் வளர்ச்சி (அதன் செயல்முறைகளை மாற்றிக் கொண்டாலன்றி) இத்துடன் நிறைவு பெற்றுவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆனால் ம.தி.முக.வின் தளம் அத்தகையதன்று. அதற்கென சாதி சார்பு எதுவும் ஊடகங்களால் மட்டுமின்றி எதிர்கட்சிகளாலும் கற்பிக்க முடியவில்லை. இத்தகைய பரந்த தளத்தில் ஏற்கனவே இருக்கும் பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு வளர்த்தெடுப்பது எளிதான பணியன்று; விரைவில் சாத்தியப்படக் கூடிய ஒன்றும் அன்று.

Monday, March 06, 2006

தேர்தல் திருவிழா - வை.கோ.

தன்மானம், கொள்கையை தற்சமயம் ஜெயலலிதாவிடம் குத்தகைக்கு கொடுத்துள்ள வை.கோ. அவர்கள் குறித்து அ.தி.மு.க.வின் நாளேட்டில் வெளியான செய்தி.....



















நன்றி: தினகரன்

Sunday, March 05, 2006

புரட்சிப் புயல் வை.கோ. அவர்களுக்கு....

தமிழக அரசியல் கட்சிகள் சாதி சார்ந்தும், சுய முன்னேற்றம் சார்ந்தும் இயங்கி வந்த வேளையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, ''அரசியலில் நேர்மை; கொள்கையில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை'' என்ற புரட்சிகரமான முழக்கங்களுடன் தனி இயக்கம் கண்டீர்கள். அதுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவராக இருந்திருந்தாலும், நீங்கள் தனி இயக்கம் கண்ட காலம் தமிழகம் முழுவதும் மாற்று தலைமையை எதிர்நோக்கியிருந்ததால், பரவலான வரவேற்பை பெற்றீர்கள்.

தமிழ், தமிழர் நலன் என்ற உங்களின் செயல்களால் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் நன்மதிப்பையும் பெற்றீர்கள். அதன் காரணமாகவே - இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவர் மீதும் போடப்படாத ''பொடா'' சட்டம் உங்கள் மீது போடப்பட்ட போது, ''பாசிச ஜெயலலிதா அரசை தூக்கி எறிவோம்'' என்று சபதமெடுத்தீர்கள். தங்களின் இந்த சபதம் நிறைவேற வகைசெய்வோம் என்று நாங்களும் உறுதியெடுத்தோம்.

ஆனால் இன்று அதே பாசிச ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதமெடுத்த போது, எங்களை நாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டோம். இது கொள்கைக்காக அமைந்த கூட்டணியல்ல, தேர்தலுக்காக அமைந்த கூட்டணி என்று சொன்னபோது கொள்கையில் உறுதி தூள் தூளானது.

தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்தான். ஆனால் அவர்களின் வாக்கு மற்றும் அவர்களின் உழைப்பு மட்டுமே தங்களின் இயக்கத்தை வளர்க்கும் என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்த செயலின் மூலம் கலைஞரின் அரசியல் சாணக்யம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். மாறாக அவரின் (வாரிசு) நோக்கத்தில் அவர் உறுதியாக இருந்ததாலேயே நீங்கள் இன்று தன்மானம் போனாலும் பரவாயில்லை என்று பாசிச ஜெயலலிதாவுடன் இணைந்துள்ளீர்கள். உங்களின் இந்த செயல் மூலம் பலனை அனுபவிக்கப்போவது கலைஞர்தான்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது 62 நாட்களும் தமிழகத்தின் மூளைமுடுக்கெல்லாம் சென்று கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டீர்கள். இன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 13பேர் அமைச்சராக ஆனதற்கு உங்களின் பிரச்சாரம் மிக முக்கிய காரணம். ஆனால் அந்த பிரச்சாரத்தை ஒலிபரப்பாத சன் தொலைக்காட்சி, இப்போது கண்டிப்பாக ஒலி பரப்பும். முதல்முறையாக எதிர்கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்த தலைவர் என்ற பட்டமும் உங்களுக்கு கிட்டும்.

இறுதியாக... என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நானும் சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களின் அரசியல் ஆசான்கள் பதவிக்கு வந்தபின் உணர்த்தியதை தாங்கள் பதவிக்கு வருமுன்பே உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.

குறிப்பு:- இந்த கடிதம் உங்கள் முடிவை மாற்றாது என்பது தெரியும். "தாயின் பேச்சை கேட்காதவர், தமையன் பேச்சையா கேட்பார்?" என்று கலைஞர் கூட எள்ளி நகையாடி இருக்கிறார். இருந்தாலும் என் மன அமைதிக்காக இதனை எழுதியுள்ளேன்.

Wednesday, March 01, 2006

தேர்தல் திருவிழா - தேர்தல் நாள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி டாண்டன் பத்திரிக்கையாளர்களை இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

தமிழ்நாடு மே 8

கேரளா ஏப்ரல் 22, 29, மே 3

மேற்கு வங்கம் ஏப்ரல் 17, 22, 27, மே 3, 8

பாண்டிச்சேரி மே 3, 8

அஸ்ஸாம் மே 03, 10

அடையாள அட்டை கேரளாவில் 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது 55 சதவீதம்தான் என்று கூறினார்.

சிறிய மாநிலங்களில் கூட பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் நடத்தப்படுவதன் இரகசியம் நாம் அறிந்ததுதானே....