Saturday, March 11, 2006

தேர்தல் திருவிழா - ம.தி.மு.க.

சென்ற வாரத்தில் தமிழக அரசியலில் நிகழ்ந்த எதிர்பாரா திருப்பத்தைத் தொடர்ந்து, வை.கோ.வும் ம.தி.மு.க.வும் விவாதப் பொருளானார்கள். வலைப்பதிவிலும் இது குறித்து அதிகம் பேசப்பட்டது. வை.கோ.வின் இந்த செயலை நியாயப்படுத்திய பதிவர்களில் பெரும்பாலோர் சொன்ன கருத்து இதுதான்:

தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே
இல்லை. ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென
உறுப்பினர் கிடையாது. கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில்
போட்டியிட்டு வெல்ல வேண்டும்.


தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே இல்லை.

பொதுவாகவே எந்த ஒரு கட்சியானாலும் தங்கள் கட்சி வளரவேண்டும் என்பதையே விரும்புவார்கள். காங்கிரஸ் கட்சி முதல் கடைசியாகத் தோற்றுவிக்கப்பட்ட பு.தா. இளங்கோவனின் பாட்டாளி முன்னேற்றக் கழகம் வரை அனைவருக்குமே இந்த விருப்பம் உண்டு. தங்கள் கட்சி வளர வேண்டும் என்ற நோக்கத்தை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மற்ற கட்சிகள் வளரக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நோக்கம் எல்லா கட்சிகளுக்குமே உண்டு. உதாரணமாக 4ஆம் நிலையில் இருப்பதாக கருதப்படும் ம.தி.மு.க. ஐந்தாம் நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்றால் விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்பது ம.தி.மு.க.வின் நோக்கம். வை.கோ. எப்படி விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்று விரும்புவாரோ அப்படியே பா.ம.க.வும் விரும்பும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்து கட்சிகளின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும். இதில் கருணாநிதி மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தி.மு.க.வை ம.தி.முக.வின் வளர்ச்சிக்கு தடையாக சொல்லப் படுவதிலிருந்து தி.மு.க.வின் அழிவுதான் ம.தி.மு.க.வின் வளர்ச்சி என்று சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் எனக்குப் புரிகிறது.

ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென உறுப்பினர் கிடையாது.

ம.தி.மு.க.வின் தலைமைதான் இதற்கு பொறுப்பாக வேண்டும். கட்சி தொடங்கப்பட்ட பின் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தல் எதிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. 1996ல் நிகழ்ந்த மாபெரும் எதிர்ப்பு அரசியலில் பதவியிலிருந்த கட்சியே பரிதாப நிலையை எட்டியதால், ம.தி.மு.க.வும் பிரதிநிதித்துவம் பெறமுடியவில்லை. 2001ல் ஜெயா அமைத்த மகா கூட்டணியினாலும் இந்த நிலை ஏற்பட்டது. இதற்கு எந்த வகையில் கருணாநிதி பொறுப்பாவார்?

கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.

அதிக தொகுதியில் போட்டியிடுவதால் கட்சிக்கு பரவலான அறிமுகம் கிடைக்க வாய்ப்புண்டு என்பதை மறுக்கவில்லை. 1996ஆம் ஆண்டு வை.கோ. இதைதான் செய்தார். தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் ம.தி.மு.க.வின் கொடி மட்டுமே இருந்த நிலையையும் 1997ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நானே பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகமான தொகுதியில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த வாதம் உண்மையானால் 1996ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க. 2001ல் தேய்ந்து போனதின் காரணம் என்ன? ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் ஓரளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் வளரவில்லை. 2001ல் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. எந்த அளவு வளர்ந்திருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் காணவேண்டும். இவற்றுக்கு பதில் கண்டால் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது தற்போது கூட்டணி கணக்கின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதை விளங்கலாம்.

ம.தி.முக. - பா.ம.க. ஒப்பீடு

ம.தி.மு.க.வின் வளர்ச்சியை பா.ம.க.வுடன் ஒப்பிட முடியாது. பா.ம.க.வின் வளர்ச்சி (அதன் செயல்முறைகளை மாற்றிக் கொண்டாலன்றி) இத்துடன் நிறைவு பெற்றுவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆனால் ம.தி.முக.வின் தளம் அத்தகையதன்று. அதற்கென சாதி சார்பு எதுவும் ஊடகங்களால் மட்டுமின்றி எதிர்கட்சிகளாலும் கற்பிக்க முடியவில்லை. இத்தகைய பரந்த தளத்தில் ஏற்கனவே இருக்கும் பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு வளர்த்தெடுப்பது எளிதான பணியன்று; விரைவில் சாத்தியப்படக் கூடிய ஒன்றும் அன்று.

0 பின்னூட்டங்கள்: