Friday, January 27, 2006

இருவுள் (இரயில்) எரிப்பும் பா.ஜ.க.வும்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுக்கக் கோரி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலிருந்து பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கியது. பாதயாத்திரையை தொடங்கி வைத்து பா.ஜ.க. மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் ரயில் மறியல் போராட்டம் நடக்காது. ரயில் எரிப்பு போராட்டம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

தேசியம் பற்றி வாய்கிழிய பேசும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரின் பேச்சு மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அறப்போராட்டம், நீதிமன்றத்தை நாடுதல் என்று எத்தனையோ சாத்வீகமான முறைகளில் பேராடாமல் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோம் என்று கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றதினால் மட்டும் தீவிரவாத செயலை நியாயப்படுத்த முடியாது.

இதனையே தனித்தமிழ்நாடு கோருவோர் கூறியிருந்தால் ''தீவிரவாதிகள் அரசுக்கு மிரட்டல்'' என்று எழுதும் ஊடகங்கள் இதனை முக்கியத்துவம் இல்லாத செய்தியாகக் கருதுவது மிகவும் வேதனையான ஒன்று. அதுபோன்று கருணாநிதியோ அல்லது இராமதாசோ இப்படிக் கூறியிருந்தால் தேசப்பத்திரிக்கைளும் இங்கு வலைப்பதியும் தேசபக்தி பதிவர்களும் எப்படியெல்லாம் வெகுண்டெழுந்து பதிவிட்டிருப்பார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தேசபக்திக்கு ஜாதி அடிப்படையையே அளவாகக் கொண்டுள்ளனர் என்பது தெளிவு.

மேலும் அவர் பேசும்போது, இங்கு நடக்கும் பாத யாத்திரை போராட்டம் ஆந்திர மாநில மக்களுக்கும், ஆந்திர அரசுக்கும் எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயக்கூலிகள் வாழ்க்கையில் இருள் வரக்கூடாது என்பதற்காக நடத்தப்படும் பாத யாத்திரையாகும் என்று கூறினார்.

ஆந்திர அரசு தமிழக்தின் உரிமையைத் தடுக்கிறது எனும் நிலை வரும்போது அந்த அரசுக்கு எதிராகத்தானே பேராடவேண்டும். ஆனால் அவர் ஆந்திர அரசை எதிர்க்வில்லை. பின் எதற்காகப் பேராடுகிறார் என்பதை பின்வரும் அவருடைய பேச்சு விளக்குகிறது.

மத்தியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க. கூட்டணி கட்சிகள், பாலாற்று பிரச்சனையை பிரதமரிடம் சொல்லி தடுத்திருக்கலாமே? ஏன் தடுத்து நிறுத்தவில்லை? நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் பாலாற்று அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருப்போம். 7 மாவட்ட மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தாமல் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.

எதிர்வரும் தேர்தலை மனதிற்கொண்டுதான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தேர்தலில் பிரச்சாரத்திற்கு இந்த வீரவசனம் பயன்படும் என்பதை மனதில் இருத்திதான் இவ்வாறு பேசியுள்ளார். ஒரு மாநிலத்தின் பிரச்சாரத்திற்காக இரயிலை எரிப்போம் என்பவர்கள் இந்தியா முழுவதும் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவே கோத்ரா இரயில் எரிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்ற எண்ணத்திற்கே வரவேண்டியுள்ளது.

திரு. டோண்டு அவர்கள் காந்தியைக் கொன்றதில் கோட்சேக்கு ஆழமான உள்நோக்கம் உண்டு என்று கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

Saturday, January 21, 2006

கோட்சேவும் டோண்டுவும்

டோண்டு அவர்கள் மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும் என்ற தலைப்பில் மலர்மன்னன் என்பவர் திண்ணையில் எழுதியதை அவரின் அனுமதியுடன் தன் வலைப்பூவில் பதிந்திருந்தார். முழு கட்டுரையையும் அவர் தன்னுடைய பதிவில் பதிந்ததிலிருந்து டோண்டுவும் மலர்மன்னனின் கருத்துடன் ஒன்றிப்போகிறார் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அந்த கட்டுரைக்கு மறுப்பாக நல்லடியாரும் இறைநேசனும் தனித்தனி பதிவுகள் மூலம் பதிலளித்து இருந்தனர். அதற்கு தன் சார்பு பதில் எதையும் கொடுக்க முடியாத டோண்டு மலர்மன்னனிடமே பதில் கேட்டு அதை தனியொரு பதிவாக இட்டிருந்தார். அந்தப் பதிவில் ஏதேனும் விளக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே விஞ்சியது.

மலர்மன்னன் மற்றும் டோண்டு ஆகியோரின் வாதத்திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. (ரொம்ப புகழாதீர்கள் என்று டோண்டு சொல்வார் என்பதால் இது போதும்.) ம.ம. என்ன சொல்லவருகிறார் என்று எனக்குப் புரிந்ததை (நீல வண்ணத்தில்)எழுதுகிறேன். இதற்கு டோண்டு பதில் சொல்வார் என்பதற்காக அல்ல. அவரின் நிலையை அறிந்து கொள்வதற்காக. இந்த வாதத்தை தமிழ்மணத்தில் தொடங்கியவர் டோண்டு என்பதாலேயே கோட்சேவும் டோண்டுவும் என்று தலைப்பிட்டுள்ளேன். அவரை தனிப்பட்ட முறையில் தாக்கும் எண்ணம் இல்லை. இனி அவரின் பதிவிலிருந்து...


//நாதுராம் விநாயக கோட்ஸே இன்றைய பயங்கரவாதிகளைப் போல் ஒரு நபரைக் கொல்வதற்காகப் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியவர் அல்ல.//

யாரைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோமோ அவரை மட்டும் கொலை செய்துவிட்டால், அவன் பயங்கரவாதியில்லை. மாறாக ஒருவரை கொலை செய்ய முனையும்போது மற்றவர்களும் இறக்க நேரிட்டால் மட்டுமே அது பயங்கரவாதம் என்று கூறுகிறார்.

//தன்னைக் குற்றுயிரும் குலை உயிருமாகச் சிதைத்துப் போடுவார்கள் என்பது தெரிந்தே அவ்வாறு வினையாற்றினார்.//

இன்றைக்கும் தற்கொலைப்படையினர் இவ்விதமே செய்கின்றனர். தீவிரவாதிகளும் தாங்கள் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டால் தங்கள் நிலை சின்னாபின்னமாகிப் போகும் என்று அறிந்தே தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் அதற்காக அவர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.

//காந்திஜியைச் சுட்டுக் கொலை செய்த சமயத்தில் கோட்ஸேயின் வயது முப்பத்து ஒன்பது. நன்கு ஆலோசித்து, முடிவு எடுக்கும் வயது. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திடீர் என முடிவு செய்யும் பருவமல்ல.//

ஆக நன்கு சிந்தித்து சுயமாக சிந்திக்கும் நிலையில் உள்ள ஒருவன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அது தவறில்லை என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் பெரும்பான்மையோரும் திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் செயல்படுகின்றனர்.

//அவர் மூர்க்கத்தனமான வெறி¤யூட்டப்படும், மூளைச் சலவை செய்யப்படும் மதரஸாக்களில் இளமை முதல் பயின்றவருமல்ல. மேலும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். பெரிய படிப்பு ஏதும் படிக்காவிடினும் தனது தரப்பு நியாயத்தைத் தௌ¤வான ஆங்கிலத்தில் சொல்லத் தெரிந்து நீதிபதியை வியக்கச் செய்தவர்.//

எந்த கருத்தைச் சொல்லவேண்டுமோ அதை அங்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். அவர் மதரஸாக்களில் பயின்ற முஸ்லிமாக இருக்கவில்லை. மதரஸாக்களில் பயின்றோர்தான் தீவிரவாதிகள். காந்தியைக் கொன்றவர், கோட்சேயாக இல்லாமல் இஸ்மாயீலாக இருந்தால் சந்தேகமற அவர் தீவிரவாதி. நீதிமன்றத்தால் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவர் தீவிரவாதிதான். காரணம் இஸ்மாயீல் என்னும் பெயருடையவர் கண்டிப்பாக மதரஸாவில் பயின்றிருப்பார். அதுமட்டுமின்றி கோட்சேக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசத்தெரியும். இஸ்மாயீலாக இருந்தால் அதற்கு வாய்ப்பே இல்லை. (ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக, அவர்களுடைய மொழியையும் வெறுத்த முட்டாள்களல்லவா?) எனவே கோட்சே செய்தது தவறு இல்லை.

//1947 ஆகஸ்டு 15 உண்மையான சுதந்திர நாள் அல்ல. டொமினியன் அந்தஸ்து தரப்பட்ட தினம்தான் அது.//

ஆமாம். அது உண்மையான சுதந்திர நாள் அல்ல. காரணம் ஆங்கிலேயர்கள் சங்பரிவாரத்திடம் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைக்கவில்லை. என்று இந்தியா இந்து ராஷ்டிரம் என்று பிரகடணப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர நாள்.

//அவற்றையே திருப்பிச் சொல்வது ஈ.வே.ரா. அவர்கள் கற்றுத் தந்த சுய மரியாதைக்கே இழுக்கு.//

ஈ.வெ.ரா. கற்றுத் தந்த சுயமரியாதையை நாங்கள் பின்பற்றத் தேவையில்லை. காரணம் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று எங்களின் வேதம் கூறிவிட்டது. எங்களைவிட தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மட்டுமே ஈ.வெ.ரா.வின் சுயமரியாதையை பின்பற்ற வேண்டும். சுயமரியாதை என்றால் என்ன என்றெல்லாம் கேட்கக் கூடாது. எங்களுக்குத் தேவைப்படும்போது கூறுவோம். சரி என்று சொல்லவேண்டும். குலத்தொழிலையே கட்டி அழு என்போம். சரி என்று தலையாட்ட வேண்டும். தனியாக டீக்கடை வைத்துக் குடி என்போம். மறு பேச்சு பேசக் கூடாது. சுயமரியாதை என்றால் பொருள் தெரியாத சில வெகுளிகள் இதனையும் சரி என்பர்.

//காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும்.//

பார்ப்பணர்களின் செயல்களுக்கு மட்டுமே ஆழமான நோக்கமெல்லாம் இருக்கும். ஈ.வெ.ரா. பூணுலை அறுத்ததெற்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. ஆர்யர்கள் வந்தேறிகள் என்று சொன்னதெல்லாம் ஆழமான நோக்கம் கொண்டது இல்லை. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தாலிபான்களுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. இராக்கின் மண்ணின் மைந்தர்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கோட்சே போன்று அமெரிக்கப் படையினரை மட்டுமே குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தினாலும் அவர்களுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. சுமார் 60 ஆண்டுகளாகத் தொடரும் தங்கள் மீதான வந்தேறி இஸ்ரேலியர்களுக்கு எதிர்வினையாக தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனப் போராளிகளுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. புலிகள் தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து தாக்குதல் நடத்துவதெற்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. (குறிப்பு: ஆழமான நோக்கம் என்றால் மனுதர்மத்தை நிலை நாட்டுவதுதான்)

//இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது.//

நான் என்ன சொல்ல வருகினேன்றால், காந்தியார் கொல்லப்பட்டது நியாயமில்லைதான். ஆனால் கோட்சேவின் பக்கம் நியாயம் இருக்கிறது. கோட்சே ஒரு கொள்கைவாதி. மாறாக காந்தியார் சுயநலவாதி. தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதிலேயே அவர் முழு கவனமுடையவராக இருந்தார். அதற்காக அவர் ஆங்கிலேயர்கள் தரும் புள்ளிவிவரங்களின்படி செயல்படும் மூளையற்றவராக இருந்தார் என்பதுதான் என்னுடைய வாதம்.

//இப்போது மறுபடியும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவே ஓரிடத்தில் கூறியபடி மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். அவர் கூறுவதை பொறுமையுடன் கேட்டால் பல விஷயங்கள் தெரிய வரும்.//

எனவே டோண்டுவாகிய நான் கூறுவதெல்லாம், காந்தியாரை கொலை செய்த கோட்சேயை கொலைகாரன் என்று கூறக்கூடாது. இதுவரை ம.ம. அவர்கள் கூறியபடி காந்தியார் சுயநலத்திற்காகவே செயல்பட்டு, பிராமணர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள சங்பரிவார் இயக்கங்களின் கையில் அரசு அதிகாரம் போய்ச் சேருவதை தடைசெய்தார். எனவே காந்தியாரை தேசத்தந்தை என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக மிகவும் உயர்ந்த ஜாதியாகிய பிராமணர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு தூக்கு மேடை ஏறிய கோட்சேயை தியாகி என்றுதான் நான் கூறுவேன். மீண்டும் சொல்கிறேன். நான் பிராமணன். மற்றவர்களைப் போன்று என் பிராமண அடையாளத்தை வெளிக்காட்ட நான் தயங்கமாட்டேன்.

Thursday, January 19, 2006

பெங்களூரு - இந்து, இஸ்லாம்

பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (21-01-06) இரவு 6.30 முதல் இரவு 10 மணி வரை இந்து மற்றும் இஸ்லாமிய புனித நூல்களின் ஒளியில் கடவுள் கோட்பாடு என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களும் பங்கு கொள்ளும் இந்த கலந்துரையாடலுக்குப் பின், கேள்வி பதில் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம் என்று சொல்லவேண்டுமோ?

இந்நிகழ்ச்சி பீஸ் டி.வி. (PEACE TV)யில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: www.irf.net

Tuesday, January 17, 2006

"புனிதப்போர் - வருகிறது குயூரோ"

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளை ஒரே ஒன்றியமாக்கி, அந்த ஒன்றியத்திற்கென்று தனி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி (இன்னும் முழுமை பெறவில்லை என்றே கருதுகிறேன்), அந்த ஒன்றியத்திற்கென்று தனி நாணயத்தை உருவாக்கி மொத்தத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற அடிப்படையில் ஒன்றிணைப்பது என்பது சுமார் 1951ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டமாகும். தற்போது அதில் ஓரளவு வெற்றியும் கிட்டியிருக்கிறது.

பெரும்பாலான உறுப்புநாடுகளால் 1997 ஆம் ஆண்டு முதல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணயமான யூரோ அறிமுகப்படுத்தப்படும்போது ஒரு டாலருக்கு ஒரு யூரோ என்றிருந்து பின்னர் சரிவைக் கண்டு, இன்று ஏற்றம் பெற்று 1 யூரோ 1.20 டாலர் என்ற அளவில் உள்ளது. (இதன் பின்னணியில் இருந்தது சதாம் உசேன். இந்த யூரோ டாலர் போட்டியே சதாமின் மீதான தாக்குதலுக்கு அடிப்படைக்காரணம்.)

ஒவ்வொரு துறையிலும் அமெரிக்காவுடன் போட்டியிட்டுக் கொண்டு வந்த ஐரோப்பிய ஒன்றியம் தகவல் துறையிலும் போட்டியைத் துவங்கியுள்ளது. அமெரிக்காவின் கூகிள் மற்றும் யாஹுவுக்கு போட்டியாக தேடுதளம் ஒன்றை அது அமைக்கப் போகிறது. அதன் பெயர்தான் குயூரோ (Quaero).

இது மட்டுமின்றி அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்குப் போட்டியானதொரு செய்தி தொலைக்காட்சி சேவையையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

புத்தாண்டு செய்தியில் தமது ஆட்சியின் இந்த வருடத்தின் செயல்திட்டம் பற்றிக்கூறும்போது, இந்த தேடுதளம் பற்றி கூறிய பிரெஞ்சு அதிபர் இப்படிக் கூறுகிறார்:

'the new geography of knowledge and cultures is being drawn. Tomorrow, that which is not available online runs the risk of being invisible to the world.'

இதனை அமெரிக்காவுடனான தொழில் சார்ந்த போட்டியாக மட்டும் கருத முடியாமைக்கான காரணம், பிரெஞ்சு அதிபரின் இந்த பேச்சும், ஐரோப்பிய ஒன்றியம் தோன்றிய வரலாறும்தான்.

ஐரோப்பிய ஒன்றியம் தோன்றக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு அரசியல்வாதியும், கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அந்த மதத்தின் புனிதர்களில் ஒருவராக கருதத்தகுந்தவராக குறிப்பிடப்படும் ராபர்ட் சுச்மான் (Robert Schuman) என்பவராவார். அந்த நேரத்தில் (இப்போதும்கூட) அமெரிக்காவில் கிறித்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும், அரசு இயந்திரம் யூதர்களின் கையில் இருந்ததை (இருப்பதை)யும் நாம் கவணிக்க வேண்டும்.

ஆக நாகரீக உலகின் புனிதப்போர் தொடங்கிவிட்டதாகவே கருதலாம்.

Monday, January 16, 2006

ஆயிரம் கோடியும் மோனோ இரயிலும்

ஆயிரம் கோடிக்கு (1000,00,00,000) எத்துனை பூச்சியங்கள் என்று கேட்டால் விரல்விட்டு எண்ணித்தான் சொல்லவேண்டியதிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு பெரிய தொகையே அல்ல என்பதை சமீபத்திய கருணாநிதியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மோனோ இரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 20,000 கோடி ரூபாய். அதில் 1,000 கோடி (வெறும் 5சதவீதம்தான்) தமிழகத்தைச் சார்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழ்நாட்டின் முக்கியப்புள்ளி வேறு யாராக இருக்கமுடியும்?

இந்தக்குற்றச்சாட்டு பொய்யாகவும் இருக்கக்கூடும். ஆனால் கூறப்பட்டுள்ள தொகை மிகப்பெரும் தொகை. (சென்னைக்கு கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கான தொகை). தினகரன் தவிர மற்ற பத்திரிக்கைகளில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெறவில்லை. ஒருவேளை இதை கருணாநிதியின் பொங்கல் நையாண்டியாக எடுத்துக் கொண்டார்களோ என்னவோ? அல்லது 1000 கோடி என்பது சிறிய தொகை என்று நினைத்துவிட்டார்களோ?

இக்குற்றச்சாட்டு குறித்து தேர்தலுக்கு முன்பே வெளிமாநிலத்தவரைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும். அவரின் கட்சியை முடக்கவும் செய்யலாம். நிரூபிக்கப்படாவிட்டால் கருணாநிதி தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்ய வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணைக்கு ஆகும் செலவு முழுவதையும் கருணாநிதியை ஏற்கச் செய்யவேண்டும்.

தவறு இன்னும் நடக்கவில்லையே. பேச்சுவார்த்தை நடத்தியதாகத்தானே அவர் கூறியுள்ளார் என வாதிடுவோர் கவனத்திற்கு: ''வருமுன் காப்போம்'' என்பது நோய்க்கு மட்டும்தானா? இது நோயைவிட மிகக் கொடுமையான நோய் அல்லவா? இப்படிச் செய்தால் ஊழல் குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ஆயிரம் கலாம்கள் வந்து ''இந்திய 2020'' என்று கூறினாலும் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை.

நன்றி: தட்ஸ் தமிழ்

Sunday, January 15, 2006

தமிழ்மணமும் பட்டையும்

தமிழ் புத்தாண்டு முதல் மேம்படுத்தப்பட்ட சேவையுடன் தமிழ்மணம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்காக காசி அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் நன்றி.

பழைய பதிப்பில் இடுகைகள் தானாகத் திரட்டப்பட்டு வந்தது. இப்போது இடுபவரே சேர்க்கும் முகமாக ''கருவிப்பட்டை'' நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் செயல்முறை புரியாமல் பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் உதவி பகுதியை சரியாகப் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களுக்காக உதவி / தகவல் பகுதியிலிருந்து....

வழமையான தமிழ்மணம் போல் அல்லாமல் இந்தப் புதிய பதிப்பு தானாக இடுகைகளைத் திரட்டுவதில்லை. இரு வழிகளில் நீங்களாக இடுகைகளை சேர்க்கலாம். இதனால் எந்தக் காத்திருப்புமமின்றி, உடனடியாக திரட்டிக்கு உங்கள் புதிய இடுகை பற்றிய தகவல் வந்து சேரும்.

முதல்வழி, 'பதிவு' கருவிப்பட்டை மூலம். உதாரணம் வேண்டுவோர், பத்ரி, கோபி, தங்கமணி ஆகியோருடையதைப் பார்க்கலாம். இப்போது நீங்கள் காணும் பட்டை, வாசகர் பட்டையாகும். சரியாக நிறுவப்பட்டிந்தால் ஒரு புது இடுகையை நீங்கள் எழுதியவுடன், அந்தப் புது இடுகையைத் திறந்ததும், இதே வாசகர் பட்டையினிடத்தில், ஒரு பதிவர் பட்டை கிடைக்கும். அதில் மேலதிகமாக இரு அம்சங்கள் உண்டு.\\முதலில், அங்கே தெரியும் ‘அனுப்பு’ என்ற பொத்தான். இதை அழுத்துவதன்மூலம், உங்கள் புது இடுகை(கள்) தமிழ்மணத்தில் (நந்தவனத்தில்) சேர்க்கப்படுகின்றன. அதே பட்டையில் உள்ள தெரிவுக்கட்டங்களை பயன்படுத்தி, பட்டையில் நீங்கள் விரும்பும் வசதிகளைக் காட்டவோ, மறைக்கவோ செய்யலாம். உதாரணமாக, வாசகர் பரிந்துரை வசதி வேண்டாம் என்று எண்ணுபவர், அதற்குக்கீழ் உள்ள கட்டத்தை தெரிவு விலக்குவதன்மூலம் இதைச் செய்ய முடியும். அல்லாமல் நீங்கள் தமிழ்மணத்தின் பெயரே எங்கும் காட்டக்கூடாது என்று விரும்பும் நன்பரானால் முழுக் கருவிப்பட்டையையுமே மறைக்கலாம்.

இரண்டாவது வழி, டெக்னொரட்டி போல நீங்களாக தமிழ்மணம் (நந்தவனம்) முகப்புக்கு வந்து உங்கள் பதிவின் சுட்டியை (இடுகையின் சுட்டி அல்ல) இடுவதன்மூலமும் உங்கள் புதிய இடுகையை சேர்க்கலாம். யாஹூ வலைப்பதிவுகள் போன்ற பதிவருக்கு முழு உரிமை அளிக்காத அமைப்புகள் வழியாக வலைப்பதிவோர், அல்லது கருவிப்பட்டை நிறுவ இயலாதோர், இதைச் செய்யலாம்.

இரு வழிகளிலுமே, சேர்க்கைக்குப்பின், உடனே, எந்த தலைப்பில் இந்த இடுகை(களைச்) சேர்க்க வேண்டும் எனச் சொல்ல ஒரு வழி இருக்கும். அங்கே உங்கள் தேர்வை சொல்லலாம்.

குறிப்பு: தங்கள் பதிவுகளை பதிப்பித்தவுடன், அந்த குறிப்பிட்ட இடுகையைத் திறந்தவுடன் இவ்வாறு தெரியும். அதில் உள்ள அனுப்பு பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் இடுகை தமிழ்மணத்தில் திரட்டப்படும்.

Saturday, January 14, 2006

பொங்கல் Vs புத்தாண்டு

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வெட்டு அவர்கள் தமிழக இஸ்லாமியர்களை நோக்கி நீங்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நல்லடியாரும் நண்பனும் பதில் அளித்திருந்தனர். இவற்றுக்கு விடையளிக்கும்போது கல்வெட்டு பின்வரும் கருத்துக்களைக் கூறினார்.

பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இது முழுக்க நன்றி செலுத்தும் திருவிழா. இதனைக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் சேர்த்து நன்றி செலுத்துகின்றனர். முஸ்லிம்களும் அவர்களின் தெய்வத்துக்கு நன்றி செலுத்தி இதனைக் கொண்டாடலாம். நன்றி செலுத்துவதுதான் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர வழிபாடு அல்ல.

பொங்கல் குறித்தான அவரது கண்ணோட்டம் இவ்வாறு அமைந்திருந்தாலும் பொதுவான கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய பின்வரும் இணைப்புகளைப் பார்வையிடவும்.

http://www.dinamalar.com/2006jan14/tn3.asp
http://www.dinamalar.com/2006jan14/anmegam.asp
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060111150047&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060112114944&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060110062914&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0

இவை மட்டுமின்றி பொங்கலிட சிறந்த நேரம் எது? என்று வேதவாத்தியார்கள் மூலம் கேட்டறிந்து அதனை பத்திரிக்கைளிலும் வெளியிடுகின்றனர். எனவே பொங்கல் என்பது இன்றைய சூழலில் இந்து மதத்தின் ஒரு பண்டிகையாகவே ஆக்கப்பட்டுவிட்டது. (ஆனால் பிராமணர்கள் இதனைக் கொண்டாடுவதில்லை என்பது வேறு விடயம்) எனவே முஸ்லிம்கள் தற்போதுள்ள செயல்முறைகள் மற்றும் சொல்லப்படும் காரணத்தின் அடிப்படையில் பொங்கல் பண்டிகையை (பண்டிகை தமிழ் வார்த்தை அல்ல என்று வாசித்த நினைவு) கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழா உனக்கென்று ஒரு பொதுவான கொண்டாட்டம் என்ன இருக்கிறது? என்று கேட்கும் கல்வெட்டு, தமிழ் ஆண்டு என்றிலிருந்து துவங்குகிறது என்பதைக்கூட அறியாதவராக இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது.

எனினும் அவரின் தமிழர் ஒருங்கிணைப்பைப் பாராட்டும் அதே வேளை, முதலில் தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடம் ஏற்படுத்தி அதனையே தமிழர் திருநாளாக கொண்டாட உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கொண்டாடப்படும் முறை இஸ்லாமிய கடவுள் கொள்கைக்கு மாற்றமாக இராதபோது அதற்கான முயற்சியில் கல்வெட்டுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்.
மீண்டுமொரு முறை ''புத்தாண்டு வாழ்த்துக்கள்''


எழுதத் தூண்டிய பதிவுகள்
http://muthukumaran1980.blogspot.com/2006/01/blog-post_13.html
http://thamizhinam.blogspot.com/2006/01/blog-post.html