ஆயிரம் கோடியும் மோனோ இரயிலும்
ஆயிரம் கோடிக்கு (1000,00,00,000) எத்துனை பூச்சியங்கள் என்று கேட்டால் விரல்விட்டு எண்ணித்தான் சொல்லவேண்டியதிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு பெரிய தொகையே அல்ல என்பதை சமீபத்திய கருணாநிதியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மோனோ இரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 20,000 கோடி ரூபாய். அதில் 1,000 கோடி (வெறும் 5சதவீதம்தான்) தமிழகத்தைச் சார்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழ்நாட்டின் முக்கியப்புள்ளி வேறு யாராக இருக்கமுடியும்?
இந்தக்குற்றச்சாட்டு பொய்யாகவும் இருக்கக்கூடும். ஆனால் கூறப்பட்டுள்ள தொகை மிகப்பெரும் தொகை. (சென்னைக்கு கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கான தொகை). தினகரன் தவிர மற்ற பத்திரிக்கைகளில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெறவில்லை. ஒருவேளை இதை கருணாநிதியின் பொங்கல் நையாண்டியாக எடுத்துக் கொண்டார்களோ என்னவோ? அல்லது 1000 கோடி என்பது சிறிய தொகை என்று நினைத்துவிட்டார்களோ?
இக்குற்றச்சாட்டு குறித்து தேர்தலுக்கு முன்பே வெளிமாநிலத்தவரைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும். அவரின் கட்சியை முடக்கவும் செய்யலாம். நிரூபிக்கப்படாவிட்டால் கருணாநிதி தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்ய வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணைக்கு ஆகும் செலவு முழுவதையும் கருணாநிதியை ஏற்கச் செய்யவேண்டும்.
தவறு இன்னும் நடக்கவில்லையே. பேச்சுவார்த்தை நடத்தியதாகத்தானே அவர் கூறியுள்ளார் என வாதிடுவோர் கவனத்திற்கு: ''வருமுன் காப்போம்'' என்பது நோய்க்கு மட்டும்தானா? இது நோயைவிட மிகக் கொடுமையான நோய் அல்லவா? இப்படிச் செய்தால் ஊழல் குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ஆயிரம் கலாம்கள் வந்து ''இந்திய 2020'' என்று கூறினாலும் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை.
நன்றி: தட்ஸ் தமிழ்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment