Tuesday, February 28, 2006

நன்றி - ரங்கசாமி

பாண்டிச்சேரி சட்டமன்றத்தின் இறுதி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு 13 சதவீத இடஒதுக்கீடு அளிக்க இந்த தீர்மானத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் நேரத்தில் இத்தகைய தீர்மானம் தீட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக முதல்வருக்கு வராத அக்கறை புதுவை முதல்வருக்கு வந்ததற்காக அவரை பாராட்டுகிறேன்.

தமிழக முஸ்லிம்கள் சார்பாக அவருக்கு மீண்டும் என் நன்றிகள்.

Monday, February 27, 2006

தேர்தல் திருவிழா - திருமா

தேர்தல் திருவிழாக் காட்சிகள் தொடங்கிவிட்டன. சமீபகாலமாக உடன்பிறவாச் சகோதரர்களாக வலம் வந்த மருத்துவர் இராமதாசு மற்றும் திருமாவளவன் இப்போது எதிர் எதிர் அணியில். பா.ம.க. போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இராமதாசையும் திருமாவளவனையும் மோதவிடுவதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டுமே காய்நகர்த்தி அதிக தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்படுமாறு தொகுதிகளை ஒதுக்குவார்கள். குறைந்தது 5 தொகுதிகளில் வி.சி.க்கும் பா.ம.க.வுக்கும் நேரடிப் போட்டி இருக்கும் என்பது என் கணிப்பு.

விஜய காந்த் அல்லது பா.ஜ.க. இருவரில் ஒருவர் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்புண்டு. ஏதேனும் ஒரு முஸ்லிம் லீகும் இடம் பெறும். (சிறுபான்மையினர் வாக்கு வேண்டுமே?) கார்த்திக்கும் இருப்பார் என்று நம்புவோம். இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, February 07, 2006

பத்தாயிரமும் சமூக நீதியும்

நேற்று முதல் முறையாக மும்பை பங்குச் சந்தையின் குறியெட்டென் 10,000 புள்ளிகளைக் கடந்து, இன்று நிலை கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியின் அளவாக இந்த குறியெட்டெண்ணும் கருதப்படுவதால் நாள்தோறும் செய்திகளில் முக்கியமாக இதனை நான் நோக்குவதுண்டு. ஏறுமுகமாக இருந்தால் மகிழ்வதுமுண்டு. ஆனால் சில நாள்களுக்கு முன் ''சமநிலைச் சமுதாயம்'' மாத இதழின் ஜனவரி 2006 பதிப்பில் ''பில்கேட்சும் நமது வல்லரசு கனவும்'' என்ற தலைப்பில் மு. அப்துர் ரஸாக் என்பவர் எழுதிய கட்டுரையில் இந்த புள்ளிவிபரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துடன் முழுதாக ஒன்றாவிட்டாலும் அவரின் பின்வரும் வரிகள் சாட்டையடிகளாக இருந்தன. இனி அவரின் கட்டுரையிலிருந்து....

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பில்கேட்ஸ் மீதான வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, நாஸ்டாக் பங்குச்சந்தையில் மைக்ரோ சாப்டின் பங்குகள் வீழ்ச்சியடைந்தவுடன், அந்த வீழ்ச்சியின் வரைபடத்தைப் புகைப்பட நகல் எடுத்ததைப்போல் அதே நாளில் மும்பை பங்குச்சந்தை வீழ்ந்தது.

இந்தச் சரிவை உலகம் முழுவதும் பரவச் செய்தது மின் வணிகம். இதனால் ஏற்பட்ட இழப்பை இணையம், மின் வணிகம், செல்போன் போன்ற தகவல் புரட்சி சேவைப் பொருளாதாரம் சார்ந்த எந்த வசதிகளையும் அனுபவித்திராத இவற்றைப் பார்த்திராத உழைக்கும் மக்களின் உழைப்பின் மூலம்தான் ஈடு செய்தார்கள். இந்தியாவின் 90 விழுக்காடு மக்களை மறந்துவிட்டு, மேல்தட்டைச் சார்ந்த 10 விழுக்காட்டினர் மீது மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவு இது.

இணையத்தின் மூலம் நடைபெறும் மின்வணிகத்தில் ஒரு நாளைக்கு 1.5 டிரில்லியன் புரள்கிறது. இந்த தொகையில் 85 விழுக்காடு நாணயச் சூதாட்டத்தின் விளைவாகப் புரளும் தொகையாகும். இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் நூற்றுக்கு ஒன்றரை ரூபாய் மட்டுமே உண்மையாகப் பொருளை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வர்த்தகம். மீதி அனைத்தும் நிதி மூலதனத்தின் சூதாட்டம்தான். இணையத்தின் மூலம் நடைபெறும் இந்த மின் வணிகத்தின் மீது நம் நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. கணினி, இணைய தகவல் தொழில் நுட்பப் புரட்சி எதை துரிதப்படுத்துகிறது என்பதற்கு இது உதாரணம்.

இது ஒரு வகையான மின்னணு யுத்தம். ஏழைநாடுகளுக்கு எதிரான மின்னணு யுத்தம். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் என அமெரிக்க மூலதனம் விடுக்கும் அறைகூவலைத்தான் நாம் எதிரொலிக்கிறோம். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகள் பன்னாட்டு நிதி உதவி நிறுவனங்களின் தயவில்லாமல் சுதந்திரமான திட்ட தயாரிப்புகள் சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. கடன் தருபவரின் சட்டமும், நீதியும் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.

நமது மண்ணின் விதைகள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. நமது நதிகள் எங்ஙனம் ஓடவேண்டும் என்பதை இனி உலக வங்கிகள் தீர்மானிக்கும். நமது வாழ்க்கை இனி உலக வர்த்தக மையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதாக இருக்கும். உலகத்தை தன்வயப்படுத்த முனையும் முதலாளித்துவ சக்திகள் நமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் இங்ஙனம் பறிக்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட பசுமைப்புரட்சியால் உற்பத்தியைப் பெருக்கினோம். ஆனால். நமது மண்வளத்தை இழந்தோம். நமது மரபு விதைகள் கடத்திச் செல்லப்பட்டு முதலாளித்துவ ஜீன் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ''காட்'' ஒப்பந்தமும், காப்புரிமையும், ட்ரிட்சும், டிரிம்சும் நமது உரிமையை கவர்ந்து சென்றுள்ளன.

தொழில் நுட்பத்தையும், சமூக நீதியையும் எப்படி இணைக்கலாம்? இதுதான் இந்த நூற்றாண்டு எதிர்கொள்கிற சவால். தொழில் நுட்பத்தை எங்ஙனம் ஜனநாயகப்படுத்துவது? இன்று மூன்றாம் நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை மட்டுமல்ல. அவர்களின் உற்பத்தி மையமாகவும் மாறுகின்றன. அமெரிக்காவில் வளர்ப்பு நாய்களுக்கு செலவாவதைவிட, குறைந்த கூலி இங்குள்ள தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் மாசாவதிலிருந்து அவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள்.

செப்டம்பர் 11 நிகழ்வில் இறந்தவர்கள் 3000 பேர்தான். ஆனால் 1984ஆம் தேதி போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடந்த கசிவு காரணமாக 13,000 பேர் இறந்தனர். இதற்குக் காரணமாக இருந்த ஆண்டர்சனைக்கூட அமெரிக்கா தண்டிக்கவில்லை.

நன்றி: சமநிலைச் சமுதாயம்

கட்டுரையின் ஒரு பகுதியை மட்டுமே தந்துள்ளேன். இதில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் மனம் உறுத்துகிறது.

Saturday, February 04, 2006

கருத்துச் சுதந்திரமும் காழ்ப்புணர்வும்

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை ஒன்றில் முஹம்மது நபி அவர்களை கேலிச் சித்திரம் வரைந்திருந்தனர். அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதற்கு வருத்தம் தெரிவிக்கும்படி கோரினர். அந்த பத்திரிக்கை வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

அக்டோபர் 20ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து புகார் செய்தனர். இதனாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாள் நார்வே பத்திரிக்கையொன்று அந்த கேலிச் சித்திரங்களை மறுபதிப்பு செய்தது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட சவூதி அரசு ஜனவரி 26ஆம் நாள் டென்மார்க் நாட்டுக்கான தன்னுடைய தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.

இந்நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து டென்மார்க்கின் பொருள்களை விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்கின்றனர். இதனை அறிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகக் கழக தலைவர் பீட்டர் மண்டெல்சன் 'நார்வே-டென்மார்க் பொருட்களை புறக்கணிப்பது, ஐரோப்பிய யூனியனின் பொருட்களை புறக்கணிப்பதற்குச் சமமானது; சவூதி அரசாங்கம் இப்புறக்கணிப்பை கைவிடவில்லையென்றால், உலக வர்த்தக சபையில் முறையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜனவரி 30ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய சிலர் பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகத்திற்கு சென்று, மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரினர்.

ஜனவரி 31ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை மன்னிப்புக் கோரியது.

பிப்ரவரி 1ஆம் நாள் பிரான்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டுப் பத்திரிக்கைகள் சித்திரத்தை மறுபதிப்புச் செய்தன.

இதன் பிறகே பிப்ரவரி 3ஆம் நாள் இந்தோனேசியா, இராக், பாலஸ்தீன், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும், இந்தோனேசியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் தாக்கப்படுகிறது. (இதை நான் ஆதரிப்பதாகக் கருதவேண்டாம்).

நன்றி: பி.பி.சி. அரப் நியூஸ்

இதைவிட சாத்வீகமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா எனத் தெரியவில்லை. தங்களுக்குப் பிடித்த கருத்தைச் சொல்ல தங்களுக்கு உரிமை உண்டு என வாதிடுவோர், தங்களுக்குப் பிடிக்காதவர்களின் பொருள்களின் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற கருத்தை ஏற்க மறுப்பது ஏனோ?

இது குறித்து வலைப்பூக்களில் பதியப்பட்ட பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலிருந்தும் பல காழ்ப்புணர்வுகள்.

நிலா கூறும்போது....

//கார்டூன்கள் வெளியிட்டது தவறு என்று வைத்துக் கொண்டால் கூட இவ்வளவு களேபரம் தேவையா என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க எவ்வளவோ அமைதியான முறைகள் இருக்கின்றனவே. ஏன் மீண்டும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும்? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று நிரூபிக்க முயலலாமே?//

நிலா அவர்களே மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை வரிசையாகப் படித்துப் பார்க்கக் கோருகிறேன்.

இதுகுறித்து டோண்டு அவர்கள்....

//ஹுஸேனை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ந்டத்தியபோது அதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்ததும் பல இசுலாமியர்கள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்கள் செய்ததே.//

என் மதத்திற்கு அப்பொழுது நேர்ந்த கொடுமை இப்பொழுது உன் மதத்திற்கு நேர்ந்துள்ளது என்று கூறுகிறார். அவருக்கு நம்முடைய கேள்வி.... அந்த ஓவியம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாக சித்தரித்த இஸ்லாமிய அறிஞர் ஒருவரையாவாது அவரால் அடையாளம் காட்ட முடியுமா?
மாறாக அல்லாஹ் குர்ஆனில், மற்றவர்கள் தெய்வமென வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள் என்று கூறியுள்ளான்.

//கராத்தே ஹுஸைனீ பத்திரிகையாளர்களை அழைத்து அந்த நிர்வாண படத்திற்கு அழகாக உடையை எழுதிப் பொருத்தினார்.// என்று கூறும் டோண்டு அவர்கள் இந்துக்கள் அந்தப் படத்திற்கு ஆடை அணிவிக்குமுன்பு ஆடை அணிவித்த கராத்தே ஹுசைனி அவர்கள் முஸ்லிம் என்பதை அறியாதவரா? ஏன் இந்த காழ்ப்புணர்வு?

பிற்காலங்களில் தோன்றிய தேசியமும், தேசியத்தின் அடையாளங்களும் மதிக்கப்பட வேண்டியவை என்று ஒத்துக் கொள்கிறோம். புஷ் தன்னுடைய நாய்க்குட்டிக்கு இந்தியா என்று பெயர் வைத்தால் கொதித்தெழுகிறோம். நாமே உருவாக்கிய நம்முடைய தேசியக் கொடி எரிக்கப்பட்டால் உணர்ச்சி வசப்படுகிறோம். அவனுடைய தனிப்பட்ட உரிமை என்று எவருமே, எந்நாட்டவருமே கருதுவதில்லை. ஆனால் தேசம் கடந்து, மொழி கடந்து உலக முஸ்லிம்களால் உயிரினும் மேலானவராகக் கருதப்படும் முஹம்மது நபியவர்களைக் கேவலம் செய்தால் பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் கூறினால் இது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறு என்னவாக இருக்கும்?

Friday, February 03, 2006

எகிப்திய சோகம்

வியாழன் மாலை 1300 பயணிகளுடன் சவூதிய அரேபியாவின் துபாஹ் துறைமுகத்திலிருந்து எகிப்தின் சஃபாகா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த எகிப்திய கப்பல் கடலில் மூழ்கியது. பெருமளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. விமானங்கள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.