Tuesday, February 07, 2006

பத்தாயிரமும் சமூக நீதியும்

நேற்று முதல் முறையாக மும்பை பங்குச் சந்தையின் குறியெட்டென் 10,000 புள்ளிகளைக் கடந்து, இன்று நிலை கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியின் அளவாக இந்த குறியெட்டெண்ணும் கருதப்படுவதால் நாள்தோறும் செய்திகளில் முக்கியமாக இதனை நான் நோக்குவதுண்டு. ஏறுமுகமாக இருந்தால் மகிழ்வதுமுண்டு. ஆனால் சில நாள்களுக்கு முன் ''சமநிலைச் சமுதாயம்'' மாத இதழின் ஜனவரி 2006 பதிப்பில் ''பில்கேட்சும் நமது வல்லரசு கனவும்'' என்ற தலைப்பில் மு. அப்துர் ரஸாக் என்பவர் எழுதிய கட்டுரையில் இந்த புள்ளிவிபரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துடன் முழுதாக ஒன்றாவிட்டாலும் அவரின் பின்வரும் வரிகள் சாட்டையடிகளாக இருந்தன. இனி அவரின் கட்டுரையிலிருந்து....

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பில்கேட்ஸ் மீதான வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, நாஸ்டாக் பங்குச்சந்தையில் மைக்ரோ சாப்டின் பங்குகள் வீழ்ச்சியடைந்தவுடன், அந்த வீழ்ச்சியின் வரைபடத்தைப் புகைப்பட நகல் எடுத்ததைப்போல் அதே நாளில் மும்பை பங்குச்சந்தை வீழ்ந்தது.

இந்தச் சரிவை உலகம் முழுவதும் பரவச் செய்தது மின் வணிகம். இதனால் ஏற்பட்ட இழப்பை இணையம், மின் வணிகம், செல்போன் போன்ற தகவல் புரட்சி சேவைப் பொருளாதாரம் சார்ந்த எந்த வசதிகளையும் அனுபவித்திராத இவற்றைப் பார்த்திராத உழைக்கும் மக்களின் உழைப்பின் மூலம்தான் ஈடு செய்தார்கள். இந்தியாவின் 90 விழுக்காடு மக்களை மறந்துவிட்டு, மேல்தட்டைச் சார்ந்த 10 விழுக்காட்டினர் மீது மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவு இது.

இணையத்தின் மூலம் நடைபெறும் மின்வணிகத்தில் ஒரு நாளைக்கு 1.5 டிரில்லியன் புரள்கிறது. இந்த தொகையில் 85 விழுக்காடு நாணயச் சூதாட்டத்தின் விளைவாகப் புரளும் தொகையாகும். இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் நூற்றுக்கு ஒன்றரை ரூபாய் மட்டுமே உண்மையாகப் பொருளை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வர்த்தகம். மீதி அனைத்தும் நிதி மூலதனத்தின் சூதாட்டம்தான். இணையத்தின் மூலம் நடைபெறும் இந்த மின் வணிகத்தின் மீது நம் நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. கணினி, இணைய தகவல் தொழில் நுட்பப் புரட்சி எதை துரிதப்படுத்துகிறது என்பதற்கு இது உதாரணம்.

இது ஒரு வகையான மின்னணு யுத்தம். ஏழைநாடுகளுக்கு எதிரான மின்னணு யுத்தம். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் என அமெரிக்க மூலதனம் விடுக்கும் அறைகூவலைத்தான் நாம் எதிரொலிக்கிறோம். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகள் பன்னாட்டு நிதி உதவி நிறுவனங்களின் தயவில்லாமல் சுதந்திரமான திட்ட தயாரிப்புகள் சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. கடன் தருபவரின் சட்டமும், நீதியும் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.

நமது மண்ணின் விதைகள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. நமது நதிகள் எங்ஙனம் ஓடவேண்டும் என்பதை இனி உலக வங்கிகள் தீர்மானிக்கும். நமது வாழ்க்கை இனி உலக வர்த்தக மையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதாக இருக்கும். உலகத்தை தன்வயப்படுத்த முனையும் முதலாளித்துவ சக்திகள் நமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் இங்ஙனம் பறிக்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட பசுமைப்புரட்சியால் உற்பத்தியைப் பெருக்கினோம். ஆனால். நமது மண்வளத்தை இழந்தோம். நமது மரபு விதைகள் கடத்திச் செல்லப்பட்டு முதலாளித்துவ ஜீன் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ''காட்'' ஒப்பந்தமும், காப்புரிமையும், ட்ரிட்சும், டிரிம்சும் நமது உரிமையை கவர்ந்து சென்றுள்ளன.

தொழில் நுட்பத்தையும், சமூக நீதியையும் எப்படி இணைக்கலாம்? இதுதான் இந்த நூற்றாண்டு எதிர்கொள்கிற சவால். தொழில் நுட்பத்தை எங்ஙனம் ஜனநாயகப்படுத்துவது? இன்று மூன்றாம் நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை மட்டுமல்ல. அவர்களின் உற்பத்தி மையமாகவும் மாறுகின்றன. அமெரிக்காவில் வளர்ப்பு நாய்களுக்கு செலவாவதைவிட, குறைந்த கூலி இங்குள்ள தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் மாசாவதிலிருந்து அவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள்.

செப்டம்பர் 11 நிகழ்வில் இறந்தவர்கள் 3000 பேர்தான். ஆனால் 1984ஆம் தேதி போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடந்த கசிவு காரணமாக 13,000 பேர் இறந்தனர். இதற்குக் காரணமாக இருந்த ஆண்டர்சனைக்கூட அமெரிக்கா தண்டிக்கவில்லை.

நன்றி: சமநிலைச் சமுதாயம்

கட்டுரையின் ஒரு பகுதியை மட்டுமே தந்துள்ளேன். இதில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் மனம் உறுத்துகிறது.

3 பின்னூட்டங்கள்:

said...

Mu.Abdulrazak? New College Professor?
Can u give any link to samanilaich chamuthaayam? or the postal address?

Thanks for a good post

said...

//நமது மண்ணின் விதைகள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. நமது நதிகள் எங்ஙனம் ஓடவேண்டும் என்பதை இனி உலக வங்கிகள் தீர்மானிக்கும்.//

உண்மைதான்!!! சில வருடங்களுக்கு முன் சமரசம் இதழில், உலக வங்கியின் சூழ்ச்சியால் பொருளாதார அடிமையாக்கப் பட்டுள்ள நாடுகள் பற்றியும் அபரிமித வட்டியால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் பற்றியும் ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தேன். சுட்டி கிடைக்கவில்லை.

தங்கள் தகவலுக்கு நன்றி.

said...

சுட்டுவிரல் மற்றும் நல்லடியார் நன்றி.

ஆசிரியர் யார் என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை.

சமநிலைச் சமுதாயம் இணைய சேவையை தொடங்கவில்லை என்றே கருதுகிறேன். அவர்களின் முகவரி:
சமநிலைச் சமுதாயம்
5, கிரீம்ஸ் சாலை, கனரா வங்கி அருகில்,
2வது மாடி, ஆயிரம் விளக்கு.
சென்னை - 600 006.
தொலைபேசி: 28290785
தொலைநகல்: 24311229
மின் அஞ்சல்: s-samuthayam@eth.net