Saturday, April 08, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள் - Follow up

மார்ச் 15 அன்று 'கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்' என்று தலைப்பில் பதிந்திருந்தேன். இந்த மாதம் விடியல் வெள்ளி என்ற மாத இதழில் வெளியான கட்டுரை அதன் தொடர்பானது என்பதால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.

----
கோவையில் ஒரு கொடுமை!

அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை. இன்று 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிணையில் விட மறுத்து இவ்வழக்கை ஜவ்வு மிட்டாயாய் இழுத்துச் செல்கின்றனர். ஆரம்பத்தில் மெகா சீரியல்களுடன் போட்டியிட்ட இவ்வழக்கு இன்று தினத்தந்தியில் வரும் சிந்துபாத் தொடருடன் போட்டியிடத் துணிந்துள்ளது. 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது நீதிதேவதை.

கொடுமை என்னவென்றால் இவ்வழக்கில் கைதாகியுள்ள சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் - இவ்விருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை எவ்விடத்திலும் இவர்கள் பெயர் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. இவ்வளவு 'இல்லைகள்' இருந்தும் 8 வருடமாக அநியாயமாக சிறையில் வைத்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியது மட்டுமல்ல. இவர்கள் உயிருடன் வீட்டிற்குச் செல்வார்களா என்ற பீதி கேள்விக்குறியாய் கண் முன்னே வளைந்து நிற்கிறது.

ஆம்! 08.03.2006 அன்று பத்திரிகையில் 'குண்டுவெடிப்பு கைதிக்கு எய்ட்ஸ்' எனச் செய்தி வந்தது. சிறையில் தன் மகன்களை, கணவன்மார்களை 'நேர்காணல்' காண்பதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பதறி அடித்து அழுகையுடன் வந்தனர். அன்று நேர்காணல் அறையில் வெறும் அழுகையும் அச்சமும் 'எப்படி?' என்ற கேள்வியும் மட்டுமே ஒலித்தன.

16 வயதினிலே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அப்பாஸ் என்ற அப்பாவி சிறுவனுக்கு இன்று வயது 24. இச்சிறுவனுக்கு எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் வருவதற்கு சிறையிலோ அல்லது வெளியிலோ செக்ஸ் ரீதியான எந்த முகாந்திரமும் இல்லை.

கோவை அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் இக்கொடிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பாஸிற்கு இருமுறை கோவை அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குடல்வால் (Appendix) அறுவை சிகிச்சையும் (அப்பொழுது 2 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது), இரண்டாவதாக கக்கத்தில் கொப்புளம் அகற்றும் சிகிச்சையும் நடந்துள்ளன. விசாரித்ததில் அரசு மருத்துவமனையிலேயே இரத்தம் ஏற்றிய போது வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் STD (Sexual Transmission Desease) பிரிவின் தலைமைப் பேராசிரியர் மகாதேவனை விசாரித்தபோது, 'அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி உள்ளது. இரத்தம் தானமாக பெறும்போது பரிசோதனை செய்துதான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இரத்தம் கொடுக்கும் நபருக்கு HIV கிருமி இருந்தால் அதன் கிருமிகள் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகுதான் இரத்தத்தில் HIV கிருமி இருப்பது தெரியவரும். அதற்கு முன் இரத்த தானம் செய்பவர்களின் இரத்தத்தில் இருப்பது தெரியாது. அதனால் இவ்வாறு விபத்து நேருவதுண்டு. எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது' என்று கூறினார். 'இதனைத் தவிர்க்க வழியே இல்லையா?' என்று கேட்டபொழுது, 'ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒழுக்கம் நிறைந்த NSS சிறுவர்கள், இளைஞர்களிடம் இரத்தானம் பெறுவதன் மூலமும் ஏற்கனவே பலமுறை இரத்ததானம் தந்தவர்கள் மூலமும் நாங்கள் தவிர்த்து வருகிறோம்' என்றார்.

இதே அரசு மருத்துவமனையில் ஒரு தம்பதியர் தன் குழந்தைக்கு சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு HIV பாஸிட்டிவ். தாய்க்கும் தந்தைக்கும் HIV கிருமி கிடையாது. வெளி உலகுக்குத் தெரியாமல் இன்னும் இரத்தத்தின் மூலம் எவ்வளவு பேருக்கு HIV தொற்றியுள்ளதோ என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சரி பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கையை யார் திருப்பித் தருவார்கள்? யார் பொறுப்பு? இன்று சிறையில் இருப்பவர்களின் வீட்டுப் பெண்கள், 8 வருடம் கழித்து வரும் தனது மகன், கணவன் முழுதாய் ஆரோக்கியமாய், உயிருடன் திரும்ப கிடைப்பார்களா என்று எண்ண வேண்டியுள்ளது.


கோவை மத்திய சிறையிலிருந்து அபூஷாய்மா
சுட்டி: தி இந்து

நன்றி: விடியல்

Wednesday, April 05, 2006

தேர்தல் திருவிழா: இயக்குநர் பாக்யராஜ்

எம்.ஜி.ஆரால் தன்னுடைய கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவரும், பிரபல (முருங்கைகாய் புகழ்) இயக்குநருமான பாக்யராஜ் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் தனி கட்சி தொடங்கி, பின்பு அதனைக் கலைத்துவிட்டு, மிக நீண்ட காலம் திரைத்துரை மற்றும் அரசியலில் பங்குபெறாமல் இருந்து வந்த பாக்யராஜ் சமீபகாலமாக மீண்டும் தன்னுடைய பயணத்தை இரு துறைகளிலும் துவங்கி வருகிறார்.

ஆனாலும் வரிசையாக திரைத்துறையினர் அ.தி.மு.கவில் இணைவதும், தி.மு.க.விலிருந்து விலகுவதுமாக (அல்லது ஒதுங்குவதுமாக) இருந்து வரும் நிலையில், தீவிர அ.தி.மு.க. விசுவாசியாக இருந்த அவர் தி.மு.க.வில் இணைந்திருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.