Wednesday, August 24, 2005

கணித விதியும் மனித விதியும்

''விதி'' - நமக்கு கஷ்டம் வரும்போது மட்டும் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை. மனிதன் தனக்கு தாங்க முடியாத வேதனைகள், சோதனைகள் ஏற்படும்போது ''என்ன செய்வது? எல்லாம் விதி!'' என்று கூறி தமக்கு ஏற்பட்ட வேதனையை அல்லது சோதனையை தனக்கு மீறிய சக்தியின் (கடவுளின்) மீது பாரத்தைப்போடுவதன் மூலம் அவனது மனம் நிம்மதியடைகிறது.

நாத்திகர்கள் கடவுளை நம்ப மறுப்பதற்கும் இந்த விதிதான் காரணமாக இருக்கிறது. எல்லாம் கடவுள் செயல் என்றால், ஏன் சுனாமி ஏற்பட வேண்டும்?, ஏன் பொருளாதார - கல்வி இன்னபிற ஏற்றத்தாழ்வுகள்? இப்படி நிறைய கேள்விகள் அவர்களை வாட்டி எடுப்பதால்தான் அவர்கள் கடவுளை நம்ப மறுக்கிறார்கள். எல்லாமே இயற்கையான ஒன்று, சில விஷயங்களுக்கு கடவுளை நம்புபவர்கள் காரணம் என்பது அவர்களின் வாதம்.

திறமை உடையவன் முன்னேற வேண்டும். இது இயற்கை. ஆனால் திறமையில்லாத பலர் முன்னேறிய நிலையிலும், (மதத்தால் பிற்படுத்தப்படாத) திறமையுடைய பலர் பின்னேறிய நிலையிலும் இருப்பதையும் நாம் காண்கிறோம். இதற்கு என்ன காரணம்? இயற்கை சீற்றம் ஏற்படுவதைப் போன்று சிலர் விஷயத்தில் மட்டும் இயற்கை விதிவிளக்கு அளிக்கிறதா? கடவுள் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை இதற்குக் காரணம் விதிதான். இங்கு தருமி அவர்களும், அவருக்குப் பின்னூட்டமிட்டவர்களும் விதியைக் குறித்து எழுப்பிய வாதங்களுக்கு எமது பதில் இதுதான்...

விதி என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அதை விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் கடினம். இறைவன் விதியை நம்பச் சொன்னதால் நாம் நம்புகிறோம். அதனைக் குறித்து அதிகம் விவாதிக்க வேண்டாம் என்று நபியவர்களால் தடுக்கப்பட்டுள்ளோம். அதற்கு எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் அது மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயமே. ஆனால் அதற்கு உதாரணமாக கணினையைக் கூறலாம்.

நாம் அச்சிடும் எழுத்துக்களை கணினி ஒரு எழுத்துவடிவமாக எடுத்துக் கொள்கிறது. இங்கு நான் அச்சிட்டதால் தான் இவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று எவரும் கூற முடியாது. நமக்குத் தெரியாமல் பல பரிமாற்றங்கள் உள்ளே நிகழ்கின்றன. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் (Predetermind) அவை செயல்படுகின்றன. எனவே புகழ் அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்தவருக்கே போய்ச்சேரும் என்பதை நாம் மறுக்கவியலாது.

அதே சமயம் 'அ' என்பதை அச்சுக்கோர்ப்பதற்கு குறிப்பிட்ட விசையைத் தட்டாமல் வேறு விசையைத் தட்டினால் 'அ' வராது என்பதும் நாமறிந்த உண்மை. இது நம்முடைய தவறுதானே தவிர ஏற்கனவே முடிவு செய்தவரின் தவறாகாது. இல்லை... இல்லை.... ஏற்கனவே முடிவு செய்தவர்(Creator)தான் தவறாக செய்துவிட்டார் என்று நாம் கூறினால் நம்மை என்னவென்று சொல்வது.

கணினியில் அச்சிடுவதற்கு மட்டுமின்றி கணினியில் பயன்படுத்தப்படும் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது பொருந்தும்.

மீண்டும் கூறுகிறேன்.... இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படித்தான் செயல்படுகிறது என்று எம்மால் உறுதியாகக் கூற முடியாது. காரணம் இது விஞ்ஞானம் இல்லை. விஞ்ஞானத்தில் வேண்டுமானால் இதுதான் சரி என்று கூறிவிடலாம். பின்பு வேறொருவர் வந்து அவர் கூறியது அத்தனையும் தவறு, இதுதான் சரி என்று கூறி, புதிய விஞ்ஞானம் உண்டாகலாம். அப்படி மாற்றங்களும் நடந்து உள்ளன. ஆனால் கடவுள் நம்பிக்கையில் அவ்வாறு மாற்றம் செய்ய முடியாது.

Sunday, August 14, 2005

இந்தியா - 59

இன்று இந்தியாவின் 59ஆவது சுதந்திர நாள். இந்தியாவை விட சுமார் பதிமூன்று மடங்கு சிறிய நாடான பிரிட்டனின் கீழ் சுமார் இருநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவில் எல்லா இனத்தவரும், மதத்தவரும், மொழியினரும் சம உரிமை பெற்றுவிட்டனரா? சம அளவில் முன்னேறியுள்ளார்களா? என்றெல்லாம் நாம் கேள்விகள் கேட்கலாம். ஆனால் இப்படி கேள்விகள் கேட்பதற்குக் கூட சுதந்திரம் தேவையாக இருந்தது. சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களின் உணர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை அனுபவிக்காவிட்டாலும், இந்தியன் படத்தில் வரும் ‘கப்பலேறிப் போயாச்சு’ என்ற பாடலை கேட்கும்போது ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

வரலாறுகளில் மட்டுமே விடுதலைப் போர் குறித்து படித்த என் நிலையே இப்படி எனில், களத்தில் நின்ற தலைவர்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? அப்படி ஒரு சூழ்நிலையில் நேரு ஆற்றிய உரை....

“இதோ இன்னும் சிறிது நேரத்தில் நள்ளிரவு 12 மணி அடித்ததும், உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்தெழுந்து, சுதந்திர நாடாகத் தலைநிமிர்ந்து நிற்கும். பழமையை விடுத்து நாம் புதுமைக்குள் நுழையும் தருணம், ஒரு சகாப்தமே முடிந்து மறையும் தருணம், நீண்ட நெடுங்காலம் அடக்கப்பட்டு மவுனித்துக் கிடந்த ஒரு நாட்டின் ஆத்மா மறுமலர்ச்சி அடையும் தருணம், வரலாற்றிலேயே அபூர்வமாக - அரிதாகத்தோன்றும் தருணம். இதோ நம் கண்முன் தெரிகிறது. இந்தத் தருணத்தில் இந்தியாவின் - இந்திய மக்களின் சேவைக்காகவும், மனித குல மேம்பாடு என்ற பரந்த லட்சியத்திற்காகவும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளச் சூளுரை ஏற்போம்.

வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, இந்தியா தனது முடிவே இல்லாத தேடுதலைத் தொடங்கியது. எந்த நிலையிலும், இந்தத் தேடுதலையோ, லட்சியத்தையோ இந்தியா கைவிட்டது இல்லை. துரதிர்ஷ்டவசமான ஒரு காலக்கட்டம் இப்போது முடிகிறது. இந்தியா மீண்டும் தன்னைச் சுயதரிசனம் செய்ய இருக்கிறது. இன்று நாம் கொண்டாடுகிற சாதனை ஒரு சிறிய முன்னேற்றத்தையே குறிக்கிறது. நம்மை எதிர் நோக்கியுள்ள பெரிய வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் ஒரு ஆரம்பத்தையே இந்த முன்னேற்றம் குறிக்கிறது. சுதந்திரம் உதயமாவதற்கு முன்னர் நாம் எல்லா வகையான துன்பங்களையும் சகித்துக்கொண்டோம். சில துன்பங்கள் இப்போதுங்கூட நிழலாடுகின்றன. எனினும் கடந்த காலம் முடிந்து விட்டது. இப்போது, வருங்காலமே நம்மை அழைக்கிறது. எனவே, நம் கனவுகள் நிறைவேறிட நாம் கடுமையாக - இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.”

இத்தகைய உணர்ச்சிபூர்வமான நேரத்தில் மகாத்மா காந்தி அவர்கள், சுதந்திர விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மிகச்சமீபத்தில்தான் அறிந்தேன்.

மகாத்மா காந்தி இந்தியா விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி, கல்கத்தா வீதிகளில் ஒரு எளிய மனிதராக நடமாடிக்கொண்டிருந்தார்!

அவர் டெல்லியில் தங்காமல் கல்கத்தா சென்றதற்கு முக்கிய காரணம் இருந்தது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், மீண்டும் வகுப்புக் கலவரங்கள் மூண்டிருந்தன. குறிப்பாக கல்கத்தாவில் கலவரம் பயங்கரமாக இருந்தது. கலவரப்பகுதிகளில் அமைதி யாத்திரை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் கல்கத்தாவுக்குச் செல்ல முடிவு செய்தார்.

சுதந்திர விழாவில் கலந்து கொள்ளுங்கள்.பிறகு கல்கத்தாவுக்குப் போகலாம் என்று தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதும், காந்தி மறுத்துவிட்டார். சுதந்திரச் செய்தியைக் கூட வெளியிடாமல், கல்கத்தாவுக்குச் சென்றார். கலவரப் பகுதிகளில் நடந்து சென்றார். அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஆகஸ்ட் 15-ந்தேதி நாடெங்கும் சுதந்திரத் திருநாள் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. அன்று கல்கத்தாவில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார்; நூல் நூற்றார்; பிரார்த்தனை நடத்தியபின், கல்கத்தா நகரைச் சுற்றிப் பார்த்தார். அமைதி திரும்பிக்கொண்டிருப்பதையும், இந்துக்களும், முஸ்லிம்களும் நேச முறையில் பழகுவதையும் கண்டு மகிழச்சி அடைந்தார்.

இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும் இந்தியர்களை மத அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் கூறுபோட்டு அவர்களுக்கிடையே கலவரங்களை ஏற்படுத்தும் சக்திகள் இன்றும் இயங்கத்தான் செய்கின்றன. அதுபோன்று காந்திகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் காந்திகள் சக்தியிழந்து இருக்கிறார்கள் என்பதும் உண்மை. கோட்சேக்களைப் புறக்கணிப்பதன் மூலம் காந்திய சக்திக்கு ஊக்கம் கொடுத்து, இந்தியா 2020 என்ற "கனவு நாயகனின்" இலக்கை அதற்கு முன்பே அடைய முயற்சிப்போம்.

உலகெங்கும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

Saturday, August 13, 2005

தொகுதி சீரமைப்பு

ஒவ்வொரு தொகுதியிலும் சமமான வாக்காளர்கள் உள்ளவாறு தொகுதிகளை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சீரமைக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல் ஆணையர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட தொகுதி சீரமைப்புக் குழு இப்பணியை மேற்கொள்ளும். ஆனால் 1976ஆம் இயற்றப்பட்ட சட்டதிருத்தம் மூலம் இப்பணி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. இது தொகுதிகளின் அமைப்பில் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக டில்லி புறநகர் தொகுதி உள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை 33,68,399. 39,033 வாக்களர்களை மட்டுமே கொண்டு மிகக் குறைந்த வாக்களர்களைக் கொண்ட தொகுதியாக இலட்சதீவு தொகுதி உள்ளது. 2001 மக்கள் தொகைக்கேற்ப தொகுதிகளை சீரமைக்கும் பணி 2003, டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தொகுதி சீரமைப்புப் பணி

சென்னை மாகாணமாக இருந்த போது 375 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அக்டோபர் 1, 1953ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபின் தொகுதிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக இருந்தது. 1956, நவம்பர் 1 மலபார் மாவட்டங்கள் கேரளாவுடன் இணைந்த பின்னர் 190ஆக ஆனது.

1956ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி சீரமைப்பு பணியின் போது சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்த்தப்பட்டது.

1959ஆம் ஆண்டு ஆந்திராவுடன் மேற்கொண்ட எல்லைச் சீரமைப்பினால் சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்தது.

1961ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘இரட்டை உறுப்பினர் தொகுதி (நீக்கம்) சட்டத்தின்படி, 38 இடங்கள் நீக்கப்பட்டன. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கை 206 ஆக நீடித்தது.

1965ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டது. இதில் 42 இடங்கள் S.C. பிரிவினருக்கும், 2 தொகுதிகள் S.T. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆங்கிலே-இந்தியன் மக்களிலிருந்து ஒருவரை அரசின் பரிந்துரைப்படி கவர்னர் உறுப்பினராக நியமிக்கிறார்.

1967 ஜூலை 18ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில், சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது 1968ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு சட்டமன்றம் மாற்றம் பெற்றது.

அன்றிலிருந்து இன்றுவரை 234 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் தொகுதி சீரமைப்பின்படி, சில தொகுதிகள் நீக்கப்பட்டு, சில புதிய தொகுதிகள் ஏற்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அந்தந்த பகுதி மக்களிடம் தொகுதிகள் நீக்கம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்வாதிகள் மிரட்சியுடன் புதிய ஜாதிக் கணக்கு போடத் துவங்கியுள்ளனர்.

Saturday, July 30, 2005

ஆரோக்கியம் என்றொரு நோயாளி

இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பதற்காகவே பார்ப்பன மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கும் அன்பர் ஆரோக்கியம்.
இவர் தான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் கிறிஸ்தவர்களின் இணைய பக்கங்களிலிருந்தே ஆதாரங்களை எடுத்து வைக்கிறார். இந்து மதத்தின் கருத்துக்களால் இஸ்லாத்தை வெல்ல முடியாது; இந்து மதத்தின் கருத்துக்கள் இன்றைய உலகிற்குப் பொருந்தாது என்பதை இவர் ஏற்றுக் கொள்கிறாரா?

முஸலிம்களை கிறிஸ்துவத்திற்கும் பௌத்தத்திறகும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் இவர், ஏன் அவர்களை இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை? அவருக்குத் தெரியும்... முஸ்லிம்கள் அடிமைக் காற்றைச் சுவாசித்ததில்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பார்க்கத் தெரியாதவர்கள். இவர்கள் இந்துக்களாக மாறினால் பார்ப்பனராகிய நமக்கு வேட்டு வைத்துவிடுவார்கள்.

பார்ப்பனரல்லாத இந்துக்களே! விழித்துக் கொள்ளுங்கள். அவருடைய பதிவுகளுக்கு பதில் அவருக்கு நாம் இடும் பின்னூட்டங்களிலேயே எழுதி வருகிறோம். பின்வரும் அவருடைய பின்னூட்டமே இப்பதிவை எழுத என்னைத் தூண்டியது.

http://bhaarathi.net/sundara/?p=226#comments
"மநுவில் சொல்லப்பட்ட விதிகளின் படி பிராமனனை தீதாக பேசும் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும். சேரிகளில் வேதம் படிப்பது தெய்வங்களை கேவலப்படுத்துவதற்கு சமம். அறிஞன் இபின் வாரக் சொன்னது போல் இந்து மதம் இந்தியாவில் இல்லாமல் இருந்தால் இந்தியா என்றொரு தேசமே அறியப் பட்டிருக்காது. ஜாதிய வேறுபாடுகள் மனிதர்களின் தன்மையை வேறுபடுத்தி அறிய அவசியமாகின்றன. இரத்தத்தில் கூட பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொண்ட மனிதன்இ ஜாதிகளை எதிர்ப்பது வியப்பே. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதெல்லாம்இ பாப்பாக்களுக்கு சொல்லப் பட்டது. ஜாதியை வெறுத்திருந்தால் பாரதி, ஜாதிகள் இல்லையடா பார்ப்பான் என்று சொல்லி இருப்பான்."

Friday, July 22, 2005

காவிரி தாய்

தமிழ் நாடு மற்றும் கர்நாடக அரசியல்வாதிகளுக்கு அவர்களின் அரசியல் வாழ்வு மரித்துப் போய்விடாமல் காக்கும் தாய்.
இந்திய தேசிய ஒற்றுமையை சில சந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாக்குவதும் இதே தாய்தான்.
அண்டை நாடான வங்கதேசத்துடன் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிந்த உங்களால் உங்கள் மாநிலங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாததும் என்னால்தான் என்று கொக்கரிப்பதும் இந்த தாய்தான்.
அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன். இந்த தாய் யாருக்குச் சொந்தம்? தமிழ்நாட்டில் நாம் இருப்பதால் நமக்கும் அதில் உரிமை உண்டு என்று கேட்கிறோம். உரிமை இருக்கலாம். ஆனால் பற்றாக்குறை என்று வரும்போது...? வீராணம் நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கான எதிர்ப்புகளை இங்கு நினைவுறுத்த வேண்டுகிறேன்.
என்னதான் மாற்று? 24.07.2005 குமுதம் ரிப்போர்டரில் தீர்வு ஒன்று கண்டேன். அது சரியான தீர்வாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் கூடுதல் அதிகாரம் பெற்றுள்ள கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த முணைய வேண்டும்.

Wednesday, July 20, 2005

அறிமுக உரை

வணக்கம். சமீபகாலமாக இணையத்துடனான என் தொடர்புகள் அதிகமாகிக் கொண்டே சென்றதின் விளைவே இந்த வலைப்பூ. வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.