Sunday, August 14, 2005

இந்தியா - 59

இன்று இந்தியாவின் 59ஆவது சுதந்திர நாள். இந்தியாவை விட சுமார் பதிமூன்று மடங்கு சிறிய நாடான பிரிட்டனின் கீழ் சுமார் இருநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவில் எல்லா இனத்தவரும், மதத்தவரும், மொழியினரும் சம உரிமை பெற்றுவிட்டனரா? சம அளவில் முன்னேறியுள்ளார்களா? என்றெல்லாம் நாம் கேள்விகள் கேட்கலாம். ஆனால் இப்படி கேள்விகள் கேட்பதற்குக் கூட சுதந்திரம் தேவையாக இருந்தது. சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களின் உணர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை அனுபவிக்காவிட்டாலும், இந்தியன் படத்தில் வரும் ‘கப்பலேறிப் போயாச்சு’ என்ற பாடலை கேட்கும்போது ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

வரலாறுகளில் மட்டுமே விடுதலைப் போர் குறித்து படித்த என் நிலையே இப்படி எனில், களத்தில் நின்ற தலைவர்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? அப்படி ஒரு சூழ்நிலையில் நேரு ஆற்றிய உரை....

“இதோ இன்னும் சிறிது நேரத்தில் நள்ளிரவு 12 மணி அடித்ததும், உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்தெழுந்து, சுதந்திர நாடாகத் தலைநிமிர்ந்து நிற்கும். பழமையை விடுத்து நாம் புதுமைக்குள் நுழையும் தருணம், ஒரு சகாப்தமே முடிந்து மறையும் தருணம், நீண்ட நெடுங்காலம் அடக்கப்பட்டு மவுனித்துக் கிடந்த ஒரு நாட்டின் ஆத்மா மறுமலர்ச்சி அடையும் தருணம், வரலாற்றிலேயே அபூர்வமாக - அரிதாகத்தோன்றும் தருணம். இதோ நம் கண்முன் தெரிகிறது. இந்தத் தருணத்தில் இந்தியாவின் - இந்திய மக்களின் சேவைக்காகவும், மனித குல மேம்பாடு என்ற பரந்த லட்சியத்திற்காகவும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளச் சூளுரை ஏற்போம்.

வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, இந்தியா தனது முடிவே இல்லாத தேடுதலைத் தொடங்கியது. எந்த நிலையிலும், இந்தத் தேடுதலையோ, லட்சியத்தையோ இந்தியா கைவிட்டது இல்லை. துரதிர்ஷ்டவசமான ஒரு காலக்கட்டம் இப்போது முடிகிறது. இந்தியா மீண்டும் தன்னைச் சுயதரிசனம் செய்ய இருக்கிறது. இன்று நாம் கொண்டாடுகிற சாதனை ஒரு சிறிய முன்னேற்றத்தையே குறிக்கிறது. நம்மை எதிர் நோக்கியுள்ள பெரிய வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் ஒரு ஆரம்பத்தையே இந்த முன்னேற்றம் குறிக்கிறது. சுதந்திரம் உதயமாவதற்கு முன்னர் நாம் எல்லா வகையான துன்பங்களையும் சகித்துக்கொண்டோம். சில துன்பங்கள் இப்போதுங்கூட நிழலாடுகின்றன. எனினும் கடந்த காலம் முடிந்து விட்டது. இப்போது, வருங்காலமே நம்மை அழைக்கிறது. எனவே, நம் கனவுகள் நிறைவேறிட நாம் கடுமையாக - இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.”

இத்தகைய உணர்ச்சிபூர்வமான நேரத்தில் மகாத்மா காந்தி அவர்கள், சுதந்திர விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மிகச்சமீபத்தில்தான் அறிந்தேன்.

மகாத்மா காந்தி இந்தியா விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி, கல்கத்தா வீதிகளில் ஒரு எளிய மனிதராக நடமாடிக்கொண்டிருந்தார்!

அவர் டெல்லியில் தங்காமல் கல்கத்தா சென்றதற்கு முக்கிய காரணம் இருந்தது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், மீண்டும் வகுப்புக் கலவரங்கள் மூண்டிருந்தன. குறிப்பாக கல்கத்தாவில் கலவரம் பயங்கரமாக இருந்தது. கலவரப்பகுதிகளில் அமைதி யாத்திரை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் கல்கத்தாவுக்குச் செல்ல முடிவு செய்தார்.

சுதந்திர விழாவில் கலந்து கொள்ளுங்கள்.பிறகு கல்கத்தாவுக்குப் போகலாம் என்று தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதும், காந்தி மறுத்துவிட்டார். சுதந்திரச் செய்தியைக் கூட வெளியிடாமல், கல்கத்தாவுக்குச் சென்றார். கலவரப் பகுதிகளில் நடந்து சென்றார். அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஆகஸ்ட் 15-ந்தேதி நாடெங்கும் சுதந்திரத் திருநாள் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. அன்று கல்கத்தாவில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார்; நூல் நூற்றார்; பிரார்த்தனை நடத்தியபின், கல்கத்தா நகரைச் சுற்றிப் பார்த்தார். அமைதி திரும்பிக்கொண்டிருப்பதையும், இந்துக்களும், முஸ்லிம்களும் நேச முறையில் பழகுவதையும் கண்டு மகிழச்சி அடைந்தார்.

இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும் இந்தியர்களை மத அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் கூறுபோட்டு அவர்களுக்கிடையே கலவரங்களை ஏற்படுத்தும் சக்திகள் இன்றும் இயங்கத்தான் செய்கின்றன. அதுபோன்று காந்திகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் காந்திகள் சக்தியிழந்து இருக்கிறார்கள் என்பதும் உண்மை. கோட்சேக்களைப் புறக்கணிப்பதன் மூலம் காந்திய சக்திக்கு ஊக்கம் கொடுத்து, இந்தியா 2020 என்ற "கனவு நாயகனின்" இலக்கை அதற்கு முன்பே அடைய முயற்சிப்போம்.

உலகெங்கும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

5 பின்னூட்டங்கள்:

said...

//இன்று இந்தியாவின் 58ஆவது சுதந்திர நாள்//

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு-15 அன்று முதல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது எனில் 2005 ஆகிய இந்த வருடம் கொண்டாடப்படுவது 59 ஆவது சுதந்திர தினம் அல்லவா?

நம்மில் பலரும் அந்தந்த வருடத்துடன் 1947 ஐ கழித்து ஒரு சுதந்திர தினத்தை குறைவாகவே சொல்கிறார்கள்.

இது பற்றி எனது பதிவில் எழுத இருந்தேன். நல்ல வேளையாக நீங்கள் எழுதி என் சந்தேகத்திற்கு வழு சேர்த்து எனக்கு வாய்ப்பளித்து விட்டீர்கள். :-)

said...

நல்லடியாரே!

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. இப்போது திருத்தம் செய்துவிட்டேன்.

Anonymous said...

காந்தியை ஏமாற்றிவிட்டு நேரு பதவியிலேதான் கண்ணா இருந்தாருன்னு சொல்லுங்க....

said...

//காந்தியை ஏமாற்றிவிட்டு நேரு பதவியிலேதான் கண்ணா இருந்தாருன்னு சொல்லுங்க.... //

அன்று காந்தி செய்ததும் சரியே.... காந்தி இல்லாதபோது நேரு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் சரியே. நேரு அப்படிச் செய்யத் தவறி இருந்தால் கோட்சேக்கள் கையில் இந்த நாடு சிக்கியிருக்கும்.

said...

http://nellikkani.blogspot.com/

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...