Sunday, March 05, 2006

புரட்சிப் புயல் வை.கோ. அவர்களுக்கு....

தமிழக அரசியல் கட்சிகள் சாதி சார்ந்தும், சுய முன்னேற்றம் சார்ந்தும் இயங்கி வந்த வேளையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, ''அரசியலில் நேர்மை; கொள்கையில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை'' என்ற புரட்சிகரமான முழக்கங்களுடன் தனி இயக்கம் கண்டீர்கள். அதுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவராக இருந்திருந்தாலும், நீங்கள் தனி இயக்கம் கண்ட காலம் தமிழகம் முழுவதும் மாற்று தலைமையை எதிர்நோக்கியிருந்ததால், பரவலான வரவேற்பை பெற்றீர்கள்.

தமிழ், தமிழர் நலன் என்ற உங்களின் செயல்களால் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் நன்மதிப்பையும் பெற்றீர்கள். அதன் காரணமாகவே - இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவர் மீதும் போடப்படாத ''பொடா'' சட்டம் உங்கள் மீது போடப்பட்ட போது, ''பாசிச ஜெயலலிதா அரசை தூக்கி எறிவோம்'' என்று சபதமெடுத்தீர்கள். தங்களின் இந்த சபதம் நிறைவேற வகைசெய்வோம் என்று நாங்களும் உறுதியெடுத்தோம்.

ஆனால் இன்று அதே பாசிச ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதமெடுத்த போது, எங்களை நாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டோம். இது கொள்கைக்காக அமைந்த கூட்டணியல்ல, தேர்தலுக்காக அமைந்த கூட்டணி என்று சொன்னபோது கொள்கையில் உறுதி தூள் தூளானது.

தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்தான். ஆனால் அவர்களின் வாக்கு மற்றும் அவர்களின் உழைப்பு மட்டுமே தங்களின் இயக்கத்தை வளர்க்கும் என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்த செயலின் மூலம் கலைஞரின் அரசியல் சாணக்யம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். மாறாக அவரின் (வாரிசு) நோக்கத்தில் அவர் உறுதியாக இருந்ததாலேயே நீங்கள் இன்று தன்மானம் போனாலும் பரவாயில்லை என்று பாசிச ஜெயலலிதாவுடன் இணைந்துள்ளீர்கள். உங்களின் இந்த செயல் மூலம் பலனை அனுபவிக்கப்போவது கலைஞர்தான்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது 62 நாட்களும் தமிழகத்தின் மூளைமுடுக்கெல்லாம் சென்று கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டீர்கள். இன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 13பேர் அமைச்சராக ஆனதற்கு உங்களின் பிரச்சாரம் மிக முக்கிய காரணம். ஆனால் அந்த பிரச்சாரத்தை ஒலிபரப்பாத சன் தொலைக்காட்சி, இப்போது கண்டிப்பாக ஒலி பரப்பும். முதல்முறையாக எதிர்கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்த தலைவர் என்ற பட்டமும் உங்களுக்கு கிட்டும்.

இறுதியாக... என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நானும் சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களின் அரசியல் ஆசான்கள் பதவிக்கு வந்தபின் உணர்த்தியதை தாங்கள் பதவிக்கு வருமுன்பே உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.

குறிப்பு:- இந்த கடிதம் உங்கள் முடிவை மாற்றாது என்பது தெரியும். "தாயின் பேச்சை கேட்காதவர், தமையன் பேச்சையா கேட்பார்?" என்று கலைஞர் கூட எள்ளி நகையாடி இருக்கிறார். இருந்தாலும் என் மன அமைதிக்காக இதனை எழுதியுள்ளேன்.

6 பின்னூட்டங்கள்:

said...

People like me had great hope on Vaiko, we thought at least we have vaiko, still maintaining his principles. But, now?

Thanks Alagappan. very well said. I felt little reduction in my sadness on reading your post

said...

pirivinai thadai sattam vandha podhu ANNA,..PIRIVINAI KORIKKAYAI OTHI VAITHU KATCHIYAI KAPPATRINAR
bjp yudanum caste party kaludanum kalaignar koottani vaithapodhu ADMK VUDAN KOOTTANI VAITHU, THA.MA. KA VAI G.K.MOOPANAR KAPPATRINAR
snehidha chtrukkalidam irundhu MDMK VAI VAIKO KAPPATRIVITTAR
number gamela idhulam sagajam pa

said...

// இது கொள்கைக்காக அமைந்த கூட்டணியல்ல, தேர்தலுக்காக அமைந்த கூட்டணி என்று சொன்னபோது கொள்கையில் உறுதி தூள் தூளானது //

சபாஷ்.. சரியாக சொன்னீர்கள் ! வைகோ மக்கள் தன்மீது வைத்திருந்த நன்மதிப்பை இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது !!!

said...

வைகோ மக்கள் தன்மீது வைத்திருந்த நன்மதிப்பை இழந்து விட்டார் என்பது உண்மைதான். பெறும் பான்மை யானவர்கள் என்னிடம் பேசும்போது வைகோவிற்கு எதிரான கருத்துக் களையே பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி இரா.சுகுமாரன்
http://rajasugumaran.blogspot.com

said...

"இறுதியாக... என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நானும் சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களின் அரசியல் ஆசான்கள் பதவிக்கு வந்தபின் உணர்த்தியதை தாங்கள் பதவிக்கு வருமுன்பே உணர்த்தியுள்ளீர்கள்".

- கோடியில் ஒரு வரி.மிக சரியாக சொன்னீர்கள்.நானும் இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன்,நீங்கள் சரியாக எழுதி விட்டீர்கள்.

திரு. வைகோ மூச்சுக்கு மூன்னுறு தடவை தொண்டர்களுக்காண இயக்கம் என்கிறார்,இவருக்கு ம்க்கள் தேவையில்லையா,தொண்டர்கள் மட்டும் பொதுமெனில் எதற்கு மக்களிடம் ஓட்டு கேட்க வர வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பெ தொண்டர்கள் பதவி வெறியை கட்டுபடுத்த முடியாதவர்,இவர் எப்படி அரசியலில் திருப்புமுனையை கொண்டு வருவார்.

திரு வைகோ அவர்களே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இருந்த ஒரே வேறுபாட்டினை வெற்றிகரமாக தகர்த்து எரிந்துள்ளீகர்கள்.வாழ்த்துகள்.

said...

வைகோ மாறியதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும். எந்த அரசியல்வாதியும்[உலகம் முழுவதும், சிலரைத் தவிர] அவர்களின் எந்த கொள்கைகளிலும்[பதவியைத் தவிர] நிலையாக் இருந்ததாக ஞாபகம் இல்லை.

பதவியாவது பணம் கொடுக்கும், கொள்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? :)