Wednesday, November 29, 2006

முல்லைப் பெரியாறு - ஒரு கேரளீய பார்வை

சமீப நாட்களாக ஒரு நாளைக்கு பல முறை "முல்லைப் பெரியாறு" என்ற பெயர் காதில் பட, அது என்னதான் பிரச்சனை? கேரளம் ஏன் எதிர்க்கிறது? என்பதை அறிய முற்பட்டு "மாத்யமம்" என்ற மலையாள நாளிதழில் நவம்பவர் 27ஆம் இடம்பெற்ற ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

144 ஆண்டுகளுக்கு முன்பு (1862ல்) இங்கு ஒரு அணை கட்ட வேண்டும் என்று பிரிட்டீசாரின் பிரதிநிதியாகிய மதராஸ் ஆளுநர் திருவிதாங்கூர் அரசரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில் இருந்த அரசர் சுமார் 25 ஆண்டுகள் சம்மதம் தெரிவிக்காமலேயே தள்ளிப்போட்டார். அதற்கு மேலும் அவரால் சமாளிக்க முடியாமல் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசர் இவ்வாறு கூறினார். 'என்னுடைய இதயத்தில் ஓடுகின்ற இரத்தத்தில் நுழைத்துதான் இதனை நான் செய்கிறேன்'.

ஆனால், மக்களாட்சியில் சிறந்த ஆட்சியாளர்கள் என்று நாம் கருதுபவர்கள் ஆட்சி செய்த போது, 1970 மே 29ஆம் நாள் நம்முடைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் முன் யோசனை இல்லாத நம் செயல்பாட்டை உணர்த்துகிறது. உலகம் முழுவதும் அணைகளைக் குறித்த அறிவும் அனுபவங்களும் நம் முன்பாக இருந்தும் நாம் இதனை செய்தோம். 1956ஆம் ஆண்டு மாநில புணர்நிர்மான சபை ஏற்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கிடையே ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்தங்கள் புதுப்பிப்பதற்கும் நீக்குவதற்கும் வாய்ப்பு இருந்தபோது நாம் அதனை செய்யவில்லை. ஒரு அணை 999 வருடங்கள் நீடித்திருக்காது என்பதைக்கூட அறியாதவர்களாக நம்முடைய ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்?

பாதுகாப்புதான் இன்றைய முக்கிய பிரச்சனை. 136 அடிக்குமேல் நீர் தேக்கினால் பிரச்சனை என்ற ரீதியில் நடக்கின்ற பிரச்சாரம் தவறானதாகும். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அணையில் நீர் தேக்குவது உலகில் நான்கு அணைகளில் மட்டுமே. இதில் மற்ற மூன்று அணைகளிலும் டீகமிஷன் செய்யப்பட்டுவிட்டது. இவற்றில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இதில் நான்காவதாக உள்ளதுதான் முல்லைப் பெரியாறு.

ரிக்டர் அளவுகோலில் 4-5 அளவு பூகம்பம் ஏற்பட சாத்தியமுள்ள இடுக்கியில்தான் இது உள்ளது. பூகம்பம் ஏற்பட்டால் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் அணை உடையும். இடுக்கியில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முல்லைப் பெரியாறின் நீர் முழுவதும் 3 - 3.30 மணி நேரத்தில் வெளியாகி, இதன் மூலம் இடுக்கியின் மற்ற மூன்று அணைகளில் ஒன்றை அது தகர்க்கும். இது லோவர் பெரியாறு, பூதத்தான் அணை போன்றவற்றையும் தகர்த்து நான்கு மாவட்டங்களில் பிரளயத்தை உண்டாக்கும். முல்லைப் பெரியாறில் 130 அடி நீர் இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு என்பதுதான் உண்மை.

இப்பிரச்சனையில் அனைவரும் ஏற்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பரிசோதனை செய்வதுடன், இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் பிளானும் தீட்ட வேண்டும். இதற்காக உலக அணை கமிஷன், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் உதவியை நாடலாம். எந்த வெளிநாட்டு நிறுவனம் பரிசோதனை செய்தாலும் முல்லைப் பெரியாறில் 75 முதல் 80 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என்றே கூறுவர்.

இதற்கு அவசியமில்லை; உச்ச நீதிமன்றம் எல்லாவித சோதனைகளையும் செய்தபின்னர்தான் தீர்பபு கூறியுள்ளது என்று தமிழ்நாடு வாதிக்குமானால், கேரள அரசு அதனை அங்கீகரிக்க வேண்டியதில்லை. மக்களின் உயிர் மற்றும் உடைமை குறித்த அச்சத்தை தீர்க்கும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. எனவே கேரள அரசு வேறு ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த அணை உடைந்தால் ஏற்படுகின்ற அனைத்து சேதங்களுக்கும் தமிழ்நாடு பொறுப்பேற்பேற்று அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு எழுதிக் கொடுக்க வேண்டும்.

மனித உயிரின் விலையை நிர்ணயிக்க இயலாது என்றாலும் ஒரு காப்பீட்டு நிறுவனம் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையையாவது தமிழ்நாடு அளிக்க வேண்டும். மரணம் அடையும் ஒவ்வொரு உயிருக்கும் 5 கோடியும், சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு அவற்றின் மதிப்பிற்கேற்பவும் நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

---
இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின் கேரளாவின் அச்சமும், எதிர்ப்பும் சரி என்றே படுகிறது. பிரச்சனை வந்தபின் செயல்படுவதைவிட வருமுன் செயல்படுவதே நல்லது.

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

//நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அணையில் நீர் தேக்குவது உலகில் நான்கு அணைகளில் மட்டுமே. இதில் மற்ற மூன்று அணைகளிலும் டீகமிஷன் செய்யப்பட்டுவிட்டது. இவற்றில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இதில் நான்காவதாக உள்ளதுதான் முல்லைப் பெரியார்.//

காவிரியில் கட்டப்பட்ட கல்லணை ஆயிரம் ஆண்டுகளாக இருப்பது கேரளாக்காரங்க்யளுக்குத் தெரியாதோ?
ஒஹோ..., இதுக்காகத்தான் கர்நாடகமும் நமக்குத் தண்ணீர் தரமாட்டேங்குதா?

//1956ஆம் ஆண்டு மாநில புணர்நிர்மான சபை ஏற்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கிடையே ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்தங்கள் புதுப்பிப்பதற்கும் நீக்குவதற்கும் வாய்ப்பு இருந்தபோது நாம் அதனை செய்யவில்லை. //

ஆமாம், தமிழகத்துக்கும் அறிவில்லை. 1956லேயே அணைக்கட்டுப் பகுதியை தமிழகத்துடன் இணைத்திருந்தால் இந்த தொந்தரவே இருந்திருக்காது.

//இப்பிரச்சனையில் அனைவரும் ஏற்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பரிசோதனை செய்வதுடன், இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் பிளானும் தீட்ட வேண்டும். இதற்காக உலக அணை கமிஷன், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் உதவியை நாடலாம். எந்த வெளிநாட்டு நிறுவனம் பரிசோதனை செய்தாலும் முல்லைப் பெரியாரில் 75 முதல் 80 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என்றே கூறுவர்.//

யார் ஆய்வு செஞ்சாலும் எங்களுக்குப் பிடிச்ச மாதிரிதான் தீர்வு சொல்லணுமின்னு ஒரு முன்முடிவோடதான் இருக்காங்க போல.

//இதற்கு அவசியமில்லை; உச்ச நீதிமன்றம் எல்லாவித சோதனைகளையும் செய்தபின்னர்தான் தீர்பபு கூறியுள்ளது என்று தமிழ்நாடு வாதிக்குமானால், கேரள அரசு அதனை அங்கீகரிக்க வேண்டியதில்லை. மக்களின் உயிர் மற்றும் உடைமை குறித்த அச்சத்தை தீர்க்கும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. எனவே கேரள அரசு வேறு ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த அணை உடைந்தால் ஏற்படுகின்ற அனைத்து சேதங்களுக்கும் தமிழ்நாடு பொறுப்பேற்பேற்று அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு எழுதிக் கொடுக்க வேண்டும்.//

உச்சநீதிமன்ற நீதியரசர்கள் முட்டாள்கள் என்று கேரளா சொல்லாமல் சொல்லுகிறது. அவர்களையும் நட்டஈடு கொடுப்போர் பட்டியலில் சேர்த்திடவேண்டியதுதான்.

1973ல் அணையை பலப்படுத்தும்வரை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டிருந்ததென்றும் அதன் பின்னரே 136 அடி வரையாக குறைக்கப்பட்டதென்றும் கூறுகிறார்களே?

1973க்கு பின்னர் கேரள அரசு நீரில் மூழ்காத பகுதிகளில் சுற்றுலாதலங்களை அமைத்துவிட்டு இப்போது அவற்றை இழக்காமல் இருக்கத்தான் இவ்வளவு நாடகம் ஆடுகின்றது என்கிறார்களே?

said...

//உச்ச நீதிமன்றம் எல்லாவித சோதனைகளையும் செய்தபின்னர்தான் தீர்பபு கூறியுள்ளது என்று தமிழ்நாடு வாதிக்குமானால், கேரள அரசு அதனை அங்கீகரிக்க வேண்டியதில்லை. மக்களின் உயிர் மற்றும் உடைமை குறித்த அச்சத்தை தீர்க்கும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது //

உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்ததை மறுக்கும் நிலையை ஒரு அரசாங்கம் செய்யுமானால் (காரணங்கள் ஆயிரம் இருக்கட்டும்) ஒரு தனி மனிதன் ஏன் அதைச் செய்யக்கூடாது? (அவனுக்கும் ஆயிரம் காரணங்கள்இருக்கலாமே?)

Anonymous said...

Look at this objectively. If water is not given, TN people suffer. But if water is hieghtened, kerala claims damage will come. What is the problem in building another dam?

Is there no solution, such as reservation, for the water problem in TN? Being surrounded by hostile neighbours, at least, as far as water goes, they should do something to make sure they are not dependent on others for water.

-kajan

said...

அழகப்பரே,
முல்லைப்பெரியாரா? முல்லைப்பெரியாறா?
பெரியாராக இருந்தாலும், பெரியாறாக இருந்தாலும் அரசியல் கலந்துவிடும்போது ...சர்ச்சை தான். சச்சரவு தான்.

said...

Boston Bala கூறுகிறார்...
பகிர்வுக்கு நன்றிகள்.

29/11/06 17:12
ஓகை கூறுகிறார்...
இப்பிரச்சனை பற்றி கேரள அரசின் பார்வை என்ன என்பதை அறிய மிக ஆவலாக இருந்தேன். இந்தப் பதிவுக்கு மிக மிக நன்றி.

இந்தக் காரணங்களை உச்ச நீதிமன்றம் எப்படி கணக்கில் கொள்கிறது என்பது தெளிவாக வேண்டும்.

30/11/06 00:05
சிறில் அலெக்ஸ் கூறுகிறார்...
ரெம்ப நல்ல தகவல். பதிவுக்கு நன்றி. மறுபக்கத்தை தெரிவதில் மகிழ்ச்சி.

30/11/06 04:47
BadNewsIndia கூறுகிறார்...
நல்ல பதிவு. political gains மட்டும் பாராமல், இரு தரப்பும், உண்மையான பிரச்ச்னையும், தேவைகளையும் புரிந்து செயல்பட்டால் நிச்சயம் தீர்வு கிட்டும்.

அணைகளினால் ஏற்படும் அழிவும் அதிகம், ஆக்கமும் அதிகம்.
விவரம் அறிந்தவர்கள் ஒன்று கூடி பொதுவான முடிவு எடுப்பது நல்லது.

30/11/06 11:45

said...
This comment has been removed by a blog administrator.
said...

இப்பதிவு தவறுதலாக இரு முறை பதியப்பட்டுவிட்டது. இரண்டாவதை நீக்கி, அதில் இடப்பட்ட பின்னூட்டங்களை இப்பதிவில் இட்டுள்ளேன்.

நயனன் அவர்கள் முல்லைப் பெரியாறு குறித்து விளக்கமான பதிவொன்றை இட்டுள்ளார். நன்றி.

http://nayanam.blogspot.com/2006/11/blog-post_30.html

மலையாளிகளுக்கு ஆதரவாக இப்பதிவை நான் இடவில்லை. அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் தமிழகமே பெரும்பாலும் விட்டுக் கொடுத்து செல்கிறது. இதுவும் எனக்கு ஏற்புடையதன்று.

காவிரி பிரச்சனையில் தமிழக அரசுகள் மெத்தனமாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் எனது கிராமமும் ஒன்று. 25 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி என் கிராமம் வரை வந்தது.

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின் கேரளாவின் அச்சமும், எதிர்ப்பும் சரி என்றே படுகிறது. பிரச்சனை வந்தபின் செயல்படுவதைவிட வருமுன் செயல்படுவதே நல்லது. இதுதான் இப்பதிவில் என்னுடைய கருத்து. இதை என் பதிவிலும் சொல்லியுள்ளேன்.